தமிழக கிராமத்தில் சாலை அமைக்க கிரிக்கெட் வீரர் சச்சின் நிதி உதவி: கிராம மக்கள் மகிழ்ச்சி

டில்லி:

மிழக கிராமம் ஒன்றில் சாலை அமைக்க பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின்  டெண்டுல்கர் தனது எம்.பி. நிதியில் இருந்து பணம் ஒதுக்கி உள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அளித்த எம்.பி.  நிதியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் எளம்பூரில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதைக்கண்ட அந்த கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தான் எம்.பியாக இருந்த காலத்தில் பல்வேறு நிலத்திட்ட பணிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி இருந்தார்.

அப்போது, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆட்சியராக இருந்த  பெரம்பலூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனது மாவட்டத்தில் உள்ள  எளம்பூர்  ஊராட்சியில் சாலைப் பணிகள் மேற்கொள்ள  நிதி ஒதுக்க கோரி கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற சச்சின் ரூபாய்  ரூ21.70லட்சம்  தனது எம்.பி நிதியில் இருந்து ஒதுக்கி பணிகள் நடைபெற  கேட்டுக்கொண்டார். தற்போது  அந்த நிதி மூலம் எளம்பூரில்  தற்போது சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

எளம்பூர் கோல்டன் சிட்டி பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

எளம்பூர் கிராம மக்களின் கோரிக்கைக்கு  தமிழகத்தில் உள்ள எந்த எம்.பி.க்களும், அரசும் செவிசாய்க்காத நிலையில், வடமாநில எம்.பி.யான சச்சின் உதவி செய்திருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.