டெல்லி:

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆம்ஆத்மி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் தற்போது டெல்லியில் பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சந்தீப்குமார் கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். இரு பெண்களுடன் அவர் ஆபாசமாக இருந்த சிடி வெளியானதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதன் பின்னர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சிடி.யில் இடம்பெற்றிருந்த ஒரு பெண் சந்தீப்குமார் மீது சுல்தான்புரி போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். இதனால் அவரை கைது செய்ய போலீஸ் முடிவு செய்திருந்ததை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதைதொடர்ந்து ரேசன் கார்டு கேட்டு வரும் பெண்களை ஆம்ஆத்மி கட்சியினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜ நக்கல் அடித்து. கோவா சட்டமன்ற தேர்தலில் சந்தீப்குமாரின் லீலைகள் அடங்கிய புகைப்படங்களை போஸ்டர்களாக ஓட்டி பாஜ பிரசாரம் செய்தது. வரும் 23ம் தேதி டெல்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், நரேலா சவீதகாத்ரியில் பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக சந்தீப் குமார் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த விவகாரம் தற்போது சமூக வளைதளங்களில் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாலியல் புகாரின் சந்தீப்குமார் சிக்கிய போது பாஜவினரின் விமர்சனங்களை தொகுத்து சமூக வளைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ கட்சிக்கு ஆதரவாக சந்தீப் குமார் பிர ச்சாரம் செய்ய முன் வந்தார். ஆனால் நாங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டோம்’’ என்றார். ‘‘மக்களை முட்டாளாக்கவும், தவறாக வழிநடத்தவும் கெஜ்ரிவால் முயற்சி செய்து வருகிறார்’’ என்று சந்தீப் குமார் தெரிவித்துள்ளார்.