Random image

தாய்லாந்து குகையில்  சிறுவர்களைக் காப்பாற்றிய  ஆஸி. மருத்துவருக்கு  நேர்ந்த சோகம்!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கச் சென்ற ஆஸ்திரேலிய மருத்துவரின் தந்தை நேற்று காலமானார்.

தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி  கால்பந்து அணி ஒன்றைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் குகைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பிறகு  கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பரபரப்பான செய்தியாக உலகம் முழுதும் பரவியது. இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 8-ம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேரும் பயிற்சியாளரும் நேற்று மீட்கப்பட்டனர்

இவர்களை மீட்கச் சென்ற அந்தக் குழுவில் இருந்த மருத்துவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹாரிஸ். மிகச்சிறந்த நீச்சல் வீரர்.

இவர்தான், “குகையில் சிக்கியிருப்பவர்களில் உடல்ரீதியாக யார் பலவீனமாக இருக்கிறார்களோ, அவர்களை முதலில் வெளியே அனுப்பலாம்” என்று ஆலோசனை கூறியவர்.

பின் மூன்று நாட்களாக குகைக்குள் தங்கிய மருத்துவர் ஹாரிஸ், சிறுவர்களின் உடலை பரிசோதித்து அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளித்தார். குகையில் சிக்கிய  அனைவரும் மீட்கப்பட்ட பின் கடைசியாக குகைக்குள் இருந்து வெளியே வந்தவரும் இவர்தான்.

சிறுவர்கள் மீட்கப்பட்ட மகிழ்ச்சியை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மருத்துவர் ஹாரிஸ் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரது தந்தை ஜிம் ஹாரிஸ் நேற்று காலமானார். இந்தத் தகவல் கிடைத்ததும் ஹாரில், தாய்லாந்தில் இருந்து உடனடியாக ஆஸ்திரேலியா திரும்பினார்.

ஹாரிஸ் விடுப்பில் இருந்த நேரத்தில்தான் தாய்லாந்தில் சிறுவர்கள் குகையில் சிக்கிவிட்டனர். ஹாரிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், விடுமுறையையும் பொருட்படுத்தாது உடனடியாக கிளம்பி தாய்லாந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.