ண்டிகர்

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்துக்களைச் சீக்கியர்களுக்கு எதிராக பாஜக தூண்டி விடுவதாக சிரோமணி அகாலிதள தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி அகாலிதளம் வேளாண் சட்டங்களை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தது.  ஆயினும் மத்திய பாஜக அரசு அந்த சட்டங்களை நிறைவேற்றியது.  இதையொட்டி அகாலிதளம் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது.  மேலும் அக்கட்சித் தலைவர் ஹர்சிமிரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.   அதன் பிறகு தொடர்ந்து இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அகாலிதளம் வற்புறுத்தியும்  பாஜக செவி சாய்க்கவில்லை.

தற்போது சர்ச்சைக்குரிய இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டில்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல், “பாஜக மக்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.  முதலில் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக தூண்டி விட்டது.  இப்போது இந்துக்களை சீக்கியர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது.

இது போல நடவடிக்கைகளையும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போராடும் விவசாயிகளிடம் கொடூரமாக நடந்துக் கொள்வதையும் நிறுத்த வேண்டும் என நாங்கள் எச்சரிக்கிறோம்.  தற்போது அரசுக்கு ஆதரவாக யாராவது பேசினால் அவர்கள் தேச பக்தர்கள் எனவும் எதிர்த்துப் பேசுவோர் துக்டே துக்டே காங்க் (சின்னஞ்சிறு தீவிரவாதிகள்) என அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் பாஜக தான் நாட்டில் உள்ள உண்மையான துக்டே துக்டே காங்க் ஆகும்.   தனது மோசமான நடவடிக்கைகளால் இந்துக்களை ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் எதிராகத் தூண்டி விட்டு நாட்டை துண்டாட பாஜக சதி செய்துவருகிறது.  இவ்வாறு நாட்டின் ஒரு சகோதரரை மற்றொரு சகோதரருக்கு எதிராகத் தூண்டி விடுவதை பாஜக நிறுத்த வேண்டும்.  அமைதியைக் கெடுத்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜக தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என எச்சரித்துள்ளார்.