புதுமனைப் புகுவிழாவுக்கும் பிறந்த நாளுக்கும் வர இயலாத அமரர் பழனி

ராமநாதபுரம்

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனி தனது வீட்டுப் புதுமனை புகுவிழா  மற்றும் பிறந்த நாளுக்கு வர முடியாமல் இருந்துள்ளார்.

 

                                        மனைவி வனிதா தேவி, மகன் பிரசன்னாவுடன் வீரர் பழனி

சீன ராணுவத்தினர் நேற்று முன் தினம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உயிர் இழந்தார்.   ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய பெற்றோர், மனைவி, இரு குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.   இவர் இந்த வருடம் ஜனவரி மாதம் விடுமுறையில் கடைசி முறையாக வீட்டுக்கு வந்துள்ளார்.   இவருடைய தம்பி இதயக்கனி என்பவரும் ராணுவத்தில் பணி புரிகிறார்.

பழனியின் மனைவி வனிதா தேவி ஒரு தனியார் கல்லூரியில் எழுத்தராகப் பணி புரிகிறார்.   தனது கணவர் மரணத்தால் இவர் பெரிதும் நிலை குலைந்து போய் உள்ளார்.  இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தந்தை மறைவு குறித்துச் சரியான புரிதல் இல்லாத குழந்தைகளாக விளையாடிக் கொண்டு உள்ளனர்.

வனிதா தேவி, “எனது கணவர் பழனி கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு வந்த போது நாங்கள் கட்டிக் கொண்டிருந்த வீடு முடியும் தறுவாயில் இருந்தது.   அந்த வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு ஜூன் மாதம் வருவதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

அதையொட்டி ஜூன் 3 அன்று விழாவையும் அதையொட்டி அவருடைய 40 ஆம் பிறந்த தினத்தையும் கொண்டாடத் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் அவர் கடந்த வாரம் தொலைப்பேசியில் ஒரு முக்கிய பணி காரணமாக தன்னால் வர முடியாது எனத் தெரிவித்தார்.  மேலும் அங்குப் பல பிரச்சினைகள் உள்ளதாகக் கூறிய அவர் அது குறித்து விளக்கம் ஏதும் கூறவில்லை. ” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழனி பி ஏ வரை படித்துள்ளார்.  அவர் கடந்த 22 வருடங்களாக ராணுவப்பணியில் ஈடுபட்டுள்ளார்.   வயதான பெற்றோர் அவரை விரைவில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று ஊருக்கு வந்து விடுமாறு வற்புறுத்திய போது அவர் அடுத்த வருடம் வந்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் தனது மகன் பிரசன்னா ராணுவத்தில் இணைந்து பணி புரிய வேண்டும் எனவும் ஆனால் பெரிய அதிகாரியாக இணைய வேண்டும் எனவும் ஊருக்கு வரும்போது எல்லாம் தெரிவிப்பார் என உறவினர்கள் கூறுகின்றனர்.   மேலும் தனது வீட்டுப் புதுமனை புகுவிழாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் மிகவும் வருத்தமடைந்ததாகவும் ஒரு நண்பர் தெரிவித்துள்ளார்.

You may have missed