காஷ்மீர் : தீவிரவாதிகளால் வீடு கொளுத்தப்பட்டவர்  ஆட்சியாளராக தேர்வு

ஸ்ரீநகர்

சுமார் 18 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் திவிரவாதிகளால் ஒரு மாணவர் வீடு கொளுத்தப்பட்டுள்ளது. .   அவர் தற்போது ஆட்சியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஸ்ரீநகரில் இருந்து சுமார் 150 கிமீ தூரத்தில் உள்ள நகரம் சுரான்கோட் தேசில்.   கடந்த 90களில் தீவிரவாதிகளால் இந்த நகரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது.   அங்கு வசித்து வந்தவர்களில் ஒருவர் முகமது பஷிர்.   தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த இவரை தீவிரவாதிகள் மிரட்டி அவரது பெரிய மகனை திவிரவாதக் குழுவில் சேர்க்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.   ஏற்கனவே பலர் இவர்கள் மிரட்டலுக்கு பயந்து குழந்தைகளை அந்த தீவிர வாதக் குழுவில் இணைத்துள்ளனர்.

குடும்பத்தினருடன் அஞ்சும் பஷீர் கான்

ஆனால் முகமது பஷீர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.   தனது குழந்தைகள் அமைதியான முறையில் கல்வி கற்று அமைதித் தூதர்களாக விளங்க வேண்டும் என விரும்பி உள்ளார்.   அதனால்  தீவிரவாதிகள் இவரது வீட்டை தீயிட்டு கொளுத்தி அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.    அப்போது பஷீரின் இளையமகன் அஞ்சும் பஷீர் கானுக்கு 9 வயது ஆகி இருந்தது.    அவர்கள் அனைவரும் ஜம்மு நகரில் குடி புகுந்தனர்.

அஞ்சும் பஷீர் கான் அவரது தமையனுடன் சேர்ந்து கல்வி பயிலத் தொடங்கினார்.   தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் எனப்படும் ஆட்சியாளர் தேர்வில் முதல் மாணவராக கான் தேர்ச்சி பெற்றுள்ளார்.   அவர், “நான் எனது சொந்த ஊரான சுரான்கோட்டில் பணி புரிய விரும்புகிறேன்.    அங்கு இன்னும் இளைஞர்கள் தீவிரவாதிகளின் பிடிகளில் உள்ளனர்.  அவர்களை நான் மீட்டாக வேண்டும்.   அப்படிச் செய்யவில்லை எனில் நான் கற்ற கல்விக்கே  ஒரு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.   சமுதாயத்துக்கு நன்மை செய்தாக வேண்டும்.   எனெனில் இந்த சமுதாயம் தான் நம்மை உருவாக்கி உள்ளது” எனக் கூறி உள்ளார்.