கோயம்புத்தூர்: ஜக்கி வாசுதேவ் யூடியூபில் வெளியிட்ட காணொளியில் மாணவர்கள் ‘கல்வியறிவற்றவர்கள்’ போல் குடியுரிமை திருத்த சட்டத்தை படிக்காமல் போராட்டம் நடத்துவதாக கண்டித்து பேசியுள்ளார். அதேவேளை தானும் இன்னும் படிக்கவில்லை என்கிறார்.

சத்குரு என்றும் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடுவது குறித்து 22 நிமிட காணொளி ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடியும் கூட “நமது சகோதரத்துவ கலாச்சாரத்தையும், வரலாற்று செறிவுடன், கூடவே சுயலாபத்துக்காக தவறான தகவல் அளிக்கும் கும்பலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என்று பகிர்ந்துள்ளார்.

21 நிமிடங்களும் 57 விநாடியும் கொண்ட அந்த காணொளி “குடியுரிமை சட்ட திருத்தத்தை நான் முழுமையாக படிக்காததால், செய்தித் தாள்கள் ஏனைய வழிகளில் மூலமாக நான் அறிந்தேன்..” என்று துவங்குகிறது. அதற்கு பிறகு மாணவர்கள் ஏன் அதை படிக்கவில்லை என தொடர்கிறது.

15 நிமிடங்களுக்குப் பிறகு பார்த்து கொண்டிருப்பவர்களிடம் தான் அந்த சட்டத்தைப் படிக்கவில்லையென்றும், மாணவர்கள் ‘கல்வியறிவற்றவர்கள்’ போல் போராடுகிறார்கள் என்றும், யாருமே அந்த சட்டத்தைப் படிக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயம் என்றும் கூறுகிறார்.

குறிப்பிட்ட மக்களிடம் ஒரு பதற்றம் தவறான தகவல்களை அவர்களுக்கு தந்ததால் நிலவுவது உண்மையே. கல்வியறிவற்ற மக்கள் கூட்டத்தைக் கொண்ட மத குழுக்கள், உள்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியரெல்லாம் குடியுரிமை இழக்கப் போகிறார்கள் என்ற தகவல்களைப் பரப்பியதே இந்த பதற்ற சூழ்நிலைக்கு காரணமேன கூறியுள்ளார்.

ஆனால், பெரும்பான்மையான மக்கள் ஜக்கி வாசுதேவின் இந்த கருத்தை விமர்சித்து வருகின்றனர். அவர் தானே இன்னும் முழுமையாக படிக்கவில்லையென கூறி மாணவர்களும் அவ்வாறே படித்திருக்க மாட்டார்கள் என்று பேசியிருப்பதை முரணாகக் காண்கின்றனர்.