கமதாபாத்

ருத்துவ பரிசோதனைக்கு பரோலில் வந்த, வடக்கு குஜராத் பகுதியை சேர்ந்த சாத்வி ஜெயஸ்ரீ கிரி, என்பவர், பாகுபலி 2 படம் பார்த்துக் கொண்டிருந்த போது காவலுக்கு வந்த போலீசாரை ஏமாற்றி தப்பி விட்டார்.

சாத்வி ஜெயஸ்ரீ கிரி (வயது 45) இந்து மத போதகராக இருப்பவர்.  ஒரு கோயிலின் ட்ரஸ்டியாக இருக்கும் இவர் பானஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த நவம்பர் மாதம் இங்குள்ள ஒரு தங்க வியாபாரியிடம் ரூ 5 கோடிக்கு தங்கம் வாங்கி விட்டு, அவருக்கு சாத்வி ஜெயஸ்ரீ பணம் தரவில்லை. வியாபாரியின் புகாரின் பேரில் போலீசார் ஜெயஸ்ரீயின் ஆசிரமத்தை சோதனை இட்டனர்,

இந்த சோதனையில் ரூ 80 லட்சம் பெருமானமுள்ள தங்க பிஸ்கட்டுகள், ரூ 1.29 கோடி ரொக்கம், இத்துடன் சில மது பாட்டில்களும் பிடிபட்டன.  குஜராத்தில் மது விலக்கு அமலில் இருப்பது தெரிந்ததே.  அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் தனது மருத்துவ பரிசோதனைக்காக பரோல் கேட்டு இருந்தார்.  அதன்படி அவர் 12 மணி நேர பரோலில் 4 போலிசாரின் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.  ஜெயஸ்ரீயின் மயக்கும் பேச்சினால் அவர் மேல் முழுநம்பிக்கை கொண்டனர் காவலர்கள்.  தனது வழக்கறிஞருடன் அவர் முதலில் ஒரு ஷாப்பிங்க் மாலுக்கு சென்றார்.  உடல் அலுப்பாக இருப்பதால் ஒரு மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார்.

அதற்கு பிறகு காவலர்களிடம் பாகுபலி 2 படம் பார்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.  காவலர்களும், ஜெயஸ்ரீ மற்றும் அவர் வழக்கறிஞருடன் படம் பார்க்கச் சென்றுள்ளனர்.  படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சாத்வி தனது கைப்பேசியில் பரோலை நீட்டிக்க தான் கொடுத்த மனு பற்றி காவலர்களுக்கு தெரியாமல் விசாரித்துக் கொண்டிருந்தார்.  நீட்டிப்பு கிடைக்காது என தகவல் கிடைத்ததும், கழிவறைக்கு செல்வதாகச் சொல்லி சென்றவர் திரும்பவே இல்லை.

தேடிச் சென்ற காவலர்களுக்கு அதன் பின் தான் அவர் தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.  உடன் வந்த வழக்கறிஞரும் காணவில்லை.  அந்தக் காவலர்கள் தற்போது தான் பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்தவர்கள்.   அதிர்ந்து போய் தங்களின் மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

தற்சமயம் அந்தக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜெயஸ்ரீயை மும்முரமாக தேடி வருகின்றனர்.   அகமதாபாத் காவல்துறை வட்டாரதில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.