‘நாணயமற்றவர்கள்’ என்ற சாத்வி பிரக்யா – பதிலுக்கு கொந்தளித்த பத்திரிகையாளர்கள்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து போபால் மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யாவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது கோபமடைந்த பிரக்யா, பத்திரிகையாளர்களை நாணயமற்றவர்கள் என்று குறிப்பிட்டதால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

தனது கருத்துக்கு சாத்வி பிரக்யா மன்னிப்புக்கோர வேண்டுமென்றும், அவரை பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

சாத்வி பிரக்யா அந்த வார்த்தையை உச்சகட்ட கோபத்தோடு பயன்படுத்தவில்லை என்றாலும், அந்த வார்த்தையானது பத்திரிகையாளர்களை கடுமையாக கோபப்படுத்திவிட்டது.

அப்பத்திரிகையாளர்கள், உள்ளூர் நிர்வாகத்திடம் பிரக்யா தாகூர் மன்னிப்பு கேட்க வேண்டுமென குறிப்பாணை வழங்கியுள்ளனர்.

மேலும், அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றும், அவரது மக்களவை உறுப்பினர் பதவியை ரத்துசெய்ய வேண்டுமென்றும் பிரதமர் மோடிக்கு குறிப்பாணையின் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர் அப்பத்திரிகையாளர்கள். அந்தளவிற்கு கொந்தளித்துள்ளனர் அவர்கள்!