மட்டமான விமர்சனம் – சிவராஜ்சிங் சவுகானின் வழிசெல்லும் சாத்வி பிரக்யா!

போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை பின்தொடர்ந்து, அம்மாநிலத்தின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யாவும், நாட்டின் முதல் பிரதமர் நேருவை கிரிமினல் என்று மோசமாக சாடியுள்ளார்.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ ஏவினார் என்று ஜவஹர்லால் நேருவை கிரிமினல் என்று மோசமாக சாடியிருந்தார் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான். அவரின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறான அதிர்வலைகள் கிளம்பின.

இதுகுறித்து தற்போது திருவாய் மலர்ந்தருளியுள்ள சர்ச்சைக்குரிய பிரக்யா தாகூர், “நமது தாய்நாட்டை யாரெல்லாம் காயப்படுத்துகிறார்களோ, நமது இந்தியா‍வை யாரெல்லாம் உடைக்க முயல்கிறார்களோ, அவர்கள் நிச்சயம் கிரிமினல்கள்தான்” என்றுள்ளார்.

சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை புகழ்ந்த பிரக்யா, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து பெருமைப்படும் அனைவரும் தேசபக்தர்கள் என்ற ஒரு புதிய தத்துவத்தையும் வெளிப்படுத்தினார். காஷ்மீர் நடவடிக்கையை தேசபக்தர்கள் ஆதரிக்கிறார்கள். அந்நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் நிச்சயம் தேசபக்தர்கள் ஆகமாட்டார்கள் என்றும் கூறினார் சாத்வி பிரக்யா.