லக்னோ:

உத்தரபிரதேசத்தில் காவி மயத்துக்கு ஒரு அளவு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் அடைவதற்காக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காவி மயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு ஒரு அளவுகோள் இல்லாமல் பொதுச் சொத்துக்களும் காவி மயத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக கழிப்பிடமும் காவி மயமாக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஹர்தோய் மாவட்டத்திற்கு யோகி வந்திருந்தார். அவரது வருகையை முன்னிட்டு அவர் தங்கியிருந்த வளாகம் முழுவதும் காவி மயமாக மின்னிக் கொண்டிருந்தது. அங்கு கழிப்பிடத்தில் இருந்த வெள்ளை நிற டைல்ஸ்கள் அகற்றப்பட்டு காவி நிற டைல்ஸ்கள் ஒட்டப்பட்டிருந்தது.

8 மணி நேரம் கொண்ட யோகி பயண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து செயலக ஊழியர்களுக்கும் காவி நிற கயிறு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தது.

முதலில் யோகி தனது அலுவலக அறைக்கு காவி நிறம் பூசினார். இதையடுத்து அமைச்சர்கள் தங்களது பங்களாக்களுக்கு காவி நிறம் பூசினர். அதேபோல் காவி நிற துண்டுகள் பாஜக.வினர் மத்தியில் பிரபலமாகி வருகிறது. யோகி தொடங்கி வைத்த அரசு பஸ்களுக்கும் காவி நிறம் பூசப்பட்டிருந்தது. அதேபோல் பெரும்பாலான காவல்நிலையங்களும் காவி நிறத்துக்கு மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.