a
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில்  முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் ஐநூறு ரூபாய் இலவச கூப்பன்தான்.  ‘ பொங்கல் திருநாளில் ஏழை எளிய மக்கள் துணிகள் வாங்கிக் கொள்ள, முதல்வர் அறிவித்துள்ள மகத்தான திட்டம் இது’ என்று அதிமுகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஆனால் ‘சகாயம் ஐ,ஏ,எஸ்ஸின்  அறிக்கையைத்தான் ஜெயலலிதா காப்பி அடித்திருக்கிறார்’ என்கிறார்கள்  கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள்.
மதுரையில் கிரானைட்  ஊழல் விவகாரங்களை கிளறியதால், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக 2012 ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார் சகாயம். அதற்கு முன்புவரையில் அரசின் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டிலேயே இரண்டு கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.
அந் நிறுவனத்தின்  விற்பனையும் 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக  உயர்ந்தது. நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை, நெசவாளர்களின் பெயர்களை சேலையில் பொறிப்பது, தொடர் தேசிய விருதுகள் என்று ஆரோக்கியமான  நடவடிக்கைளை மேற்கொண்டார்.
மேலும்,  ‘ பொங்கல்  திருநாள் சமயத்தில் 500 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை  பொது மக்களுக்கு வழங்கலாம்” என்ற புதுமையான திட்டத்தையும் அத் துறையின் செயலருக்கு அறிக்கையாக அளித்தார் சகாயம்.
‘இது மிகவும் நல்ல திட்டம். இதை கூடிய  விரைவில் அமல்படுத்தலாம்’ என்று  துறை செயலர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்தத் திட்டம் அப்போது  அமலுக்கு வரவில்லை. அதை இப்போது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டார் கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா’ என்கிறார்கள்.
 
b
மேலும்,, ” கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு  சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த காலத்தில் ‘அரசின் இலவச, வேட்டி சேலைத் திட்டம் பற்றி ஆய்வு  மேற்கொண்டார். அதை அறிக்கையாகவும் அரசுக்கு அனுப்பினார். அதில்,    ‘ பொங்கல் திருநாளின் போது தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை 2 கோடி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால்,  பெரும்பாலோர்  அந்த வேட்டி, சேலைகளைப் பயன்படுத்தவில்லை. இலவச வேட்டி, சேலை திட்டத்திற்குத் தயாராகும் துணிகள்  விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசு கொள்முதல் செய்யும் துணிகளில் 98 சதவீதம் விசைத்தறிக் கூடங்களில் இருந்துதான்  பெறப்படுகிறது.
ஆகவே  கைத்தறி நெசவாளிகளுக்கு பயனேதும் இல்லை.  சேலம், திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் வசதிபடைத்தவர்கள்தான் விசைத்தறிகளை நடத்துகிறார்கள். .  ஆகவே, இலவச வேட்டி சேலைக்கு பதில்,  கோ-ஆப்டெக்ஸின் 500 ரூபாய் கூப்பனைக் கொடுத்தால் மக்கள் தாங்கள் விரும்பியதை வாங்குவார்கள்.  இதன் மூலம்,  கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு 500 கோடி ரூபாய்  வருமானம் வரும்.
அதை ஏழை நெசவாளிக்கும் உதவ செலவிடலாம்.   இலவச வேட்டி, சேலை திட்டத்தை ரத்து செய்யுங்கள்’ என அறிக்கை அளித்தார்  சகாயம்.
ஆனால் இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்தினால் சகாயத்தின் புகழ் உயரும். ஆகவே இதை தற்போது செயல்படுத்த வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது.
அதுதான் இப்போது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது” என்கிறார்கள்.