‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புதுச்சேரி:

‘சாகித்ய அகாடமி விருது’பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

74 வயதான எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியை  சேர்ந்தவர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்துள்ளார்.

இவரது முதல் சிறுகதை என்ன உலகமடாபரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார்.

1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான  முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது.

இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாக்கப் பட்டுள்ளது. இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகிறார்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றிய அவர், சொந்த ஊரான லாஸ் பேட்டையில் வசித்து வந்தார்.  கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இடை யிடையே  பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

கடந்த சில நாட்களாக நோய் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிரபஞ்சன் சிகிச்சை பலனின்றி காலமானார்.