பசுப் பாதுகாப்புக்கு தனி அமைச்சகம் கோரும்  சாது

போபால்

த்தியப் பிரதேச அரசால் அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்ட சாது ஒருவர் பசு பாதுகாப்புக்காக தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச அரசு சமீபத்தில் சில சாதுக்களுக்கு அமைச்சர் அந்தஸ்து அளித்தது.  அவர்களில் அகிலேஷ்வரானந்த் கிரி என்பவரும் ஒருவர் ஆவார்.  இவர் பசுக்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக உள்ளவர் ஆவார்.  சமீபத்தில் இந்த ஆணையம் பசுக்கள் பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்க கூட்டம் ஒன்றை நிகழ்த்தியது.   அந்தக் கூட்டத்தை அகிலேஷ்வரானந்த் தலைமை தாங்கி நடத்தினார்.

கூட்ட முடிவில் அந்த சாது மத்திய பிரதேச முதல்வருக்கு ஒரு கோரிக்கை மனு அளித்தார்.   அந்த மனுவில், “பசுக்கள் நமது நாட்டில் புனிதமாக கருதப் படுகிறது.   அத்தகைய பசுக்கள் பாதுகாப்பை மேம்படுத்துவது  அரசின் கடமை ஆகும்.    பசுக்களை உணவுக்காக கொல்வதை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும்.   அத்துடன் பசுக்களை வெட்டும் இடங்கள் மூடப்பட வேண்டும்.

பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.   ராஜஸ்தானில் ஏற்கனவே பசு பாதுகாப்பு இயக்குனரகம் தொடங்கப் பட்டுள்ளது.   இது அரசியல் நலன் மட்டும் இன்றி நாட்டு நலனுக்கும் வகை செய்யும்.   ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பசு வளர்க்கப்பட்டால் நாட்டில் பால் வளம் பெருகும்” என தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.   வாக்காளர்களைக் கவர பாஜக இவ்வாறு அவரை பேச வைத்துள்ளது எனவும்  அவருடைய கருத்துக்கள் எல்லாமே ஒரு ‘அரசியல் ஸ்டண்ட்’ எனவும் விமர்சித்துள்ளது.    மேலும் பல கட்சிகளும் சாது விளம்பரத்துக்காக மட்டுமே இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளன.

இது குறித்து மத்தியப் பிரதேச அரசின் விலங்கியல் துறை, “மாநிலத்தில் ஏற்கனவே பசு பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அதனால்  தனியாக ஒரு துறை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.    ஏற்கனவே அரசு பசுக்களுக்கு அளிக்கும் மானியத் தொகையை உயர்த்தி உள்ளது.   இதன் மூலம் பசு பாதுகாப்பு மேம்படும்.    அத்துடன் தற்போது அரசு எடுத்து வரும் பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதால் பசு பாதுகாப்புக்கு என தனி அமைச்சகம் அமைக்கப் போவது இல்லை” என தெரிவித்துள்ளது.