கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருக்கிறார்.


இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையிலான இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இருப்பினும், இலங்கையின் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.


தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளன.
கோத்தபய ராஜபக்சேவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த சஜித் பிரேமதாசா, பின்னர் முன்னணி பெற்றார். அவருக்கு யாழ்ப்பாணம், திரிகோணமலை, திகாமடுல்லை, காலி, வன்னி ஆகிய தொகுதிகள் கை கொடுத்துள்ளன.


குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் லட்சக்கணக்கான வாக்குகள், கோத்த பயாவை விட, சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்துள்ளது. கோத்தபயாவுக்கு ரத்தனகிரி, மாத்தளை, கொழும்பு, ஹம்பந்தோட்டா உள்ளிட்ட தொகுதிகள் கை கொடுத்திருக்கின்றன.