இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராகும் சஜித் பிரேமதாச: எம்.பி மனோ கணேசன் தகவல்

இலங்கை நாட்டின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை முன்னிருத்த ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுடன், ரணில் விக்கிரமசிங்கே முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் எம்.பி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் 16ம் தேதி அந்நாட்டில் நடைபெற்றது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 52.25% வாக்குகளை பெற்று, 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்நாட்டின் புதிய அதிபராக பொதுஜன முன்னணிக் கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச 41.99% வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இதை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமாக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்ய, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.

இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் முடிவு குறித்து நேற்று கூடி விவாதித்த ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள், அக்கூட்டணியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கேவிடம் சஜித் பிரேமதாசவை எதிர்கட்சி தலைவராக ஒருமித்தமாக தேர்வு செய்ய பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்றத்தில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் எம்.பி மனோ கணேசன், “எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற தலைவராக சஜித் பிரேமதாசவை முன்னிருத்த ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுடன், ரணில் விக்கிரமசிங்கே முடிவெடுத்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருமித்தமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதன் மூலம் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி