டில்லி,

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரது மனைவி சாக்ஷி தோனி மத்திய அரசை கடிந்துகொண்டார். இதையடுத்து இந்து அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் சொல்லமுடியாத வார்த்தைகளில் அந்தப் பெண்ணை  விமர்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரபல விளையாட்டு வீரர் எம் எஸ் தோனி ஆதார் அட்டையில் பதிவுசெய்து வைத்திருந்த அவரது தொலைபேசி எண் உள்பட முக்கியமான தகவல்கள் வெளியாயின. இதனால் தோனியும் அவரது மனைவி சாக்ஷி தோனியும் மிகவும் அதிருப்தியடைந்தனர். இதைத் தொடர்ந்து தோனியின் மனைவி சாக்ஷி, தனது ட்விட்டரில் இந்திய  குடிமகனின் தனி உரிமை பாதுகாப்பாக உள்ளதா என  மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை கடுமையாக சாடியிருந்தார்.

உடனே ரவிசங்கர் பிரசாத், தோனியின் தகவல் கசிந்தது தொடர்பாக கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் இச்சம்பவத்தை அடுத்து சாக்ஷி தோனியை பாஜக ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து விட்டனர். அவர் ஒரு பெண் என்றும் பாராமல் மோசமான வார்த்தைகளில்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக பேசினாலே அவர்களை வார்த்தைகளால் தாக்குவதும், குண்டர்களை கொண்டு அடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.