புதுடெல்லி: டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, முதன்முறையாக, உயர்மட்ட நிர்வாக பொறுப்பில் பணிபுரிவோரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா பவர் டிரென்ட், டாடா இண்டர்நேஷனல், டாடா கேப்பிடல், வோல்டாஸ் உள்ளிட்ட டாடா குழுமத்தைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இக்குழுமத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, “டாடா குழுமத்தின் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதன்முதலாக, உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுடைய ஊதியம் 20% அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
முதலில், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதனின் ஊதியம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்களை பாதுகாப்பதில் எப்போதுமே டாடா நிறுவனம் முன்மாதிரியாக இருக்கும். மாற்றங்கள் மேலிருந்தே துவங்கும்” என்றார் அவர்.
இந்தியாவின் தனியார் துறை நிறுவனங்களில் பெரிய பாரம்பரியம் கொண்டது டாடா நிறுவனம். கொரோனா பரவல் தொடர்பான தொடர் ஊரடங்கு நடவடிக்கைகள் இந்நிறுவனத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் அசைத்துப் பார்த்ததே இம்முடிவுக்கு காரணம் என்று தெரிவிக்கின்றனர் பொருளாதாரப் பார்வையாளர்கள்.