8வழிச்சாலை வழக்கு: உச்சநீதி மன்றத்தில் அதிமுக அரசுக்கு எதிராக பாமக கேவியட் மனு தாக்கல்

--

சென்னை:

8வழிச்சாலை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு வழக்கு தொடர்ந்த பாமக உள்பட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாஜக தலைவர் இல.கணேசனும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக,  அதிமுக அரசுக்கு எதிராக  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.  அதில், தமிழக அரசு 8 வழிச்சாலை தொடர்பாக மேல்முறையீடு செய்தால், தங்களின்  கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

8 வழிச்சாலை வழக்கில், தேர்தல் முடிந்ததும் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான்,  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை தெரிவித்து வந்த பாமக, தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாமகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 8 வழிச்சாலை தொடர்பாக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு பாமகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தற்போது உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனுவை பாமக தாக்கல் செய்திருப்பதும் அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அதிமுக தலைவர்கள் உள்பட அதிமுக, பாஜக தொண்டர்கள் பாமகவுக்கு எதிரான  மன நிலையில் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி உள்பட பாமக வேட்பாளர்களை மண்ணை கவ்வச்செய்யும் உள்குத்து வேலைகளில் அதிமுகவினர் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.