சென்னை: சேலம் சென்னை 8 வழிச்சாலைக்காக உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு  தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில்  மறு விசாரணை இன்று  நடைபெற உள்ளது.

சென்னை – சேலம் பயண நேரத்தை பாதியாக குறைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு 10 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால், இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்ட விவசாய நிலங்களும், நீர்நிலைகளும், காடுகளும் அழியும் சூழல் ஏற்பட்டது., தமிழகஅரசு காவல்துறையினர் உதவியுடன் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜராகி வாதிட்ட அரசு வழக்கறிஞர், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தைகைய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னரே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறினார். அதுபோல,  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் இணை இயக்குனர் ஆஷிஷ்குமார் உச்சநீதி மன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை. நிலம் கையகப்படுத்துவதற்கு நம்பத் தகுந்த ஆவணங்களே போதுமானவை. சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டுத்தான் எட்டுவழி சாலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுதுத ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.