சேலம் -சென்னை 8 வழிச்சாலை: விவசாயிகள் எதிர்ப்பால் மண் பரிசோதனை நிறுத்தம்

சேலம்:

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்காக கடந்த ஒரு வாரமாக ஜருகுமலையில் நடைபெற்று வந்த மண் பரிசோதனை விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக  நிறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை-சேலம் இடையே, எட்டு வழிச்சாலை அமைக்க, தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 53 கி.மீ., தூரத்திற்கு, நில அளவீடு செய்யப்பட்டு, முட்டுக்கல் நடப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, எட்டு வழிச்சாலைக்கு கையகப்படுத்தவுள்ள விவசாயிகளின் நிலப்பரப்பு, கிணறு, வீடு, போர்வெல், மரங்கள் குறித்து, கணக்கெடுக்கும் பணி முடிவடைந்துள்ளது. ஆளில்லா குட்டி விமானம் மூலம், இரண்டு முறை நிலப்பரப்பு குறித்து, படம் எடுக்கும் பணி நடந்துள்ளது.

எட்டு வழிச்சாலை அமையவுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பாலம் அமைப்பதற்கு, மண் பரிசோதனை செய்யும் பணி, கடந்த மாதம்  29ந்தேதி  முதல், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் நடந்து வருகிறது.சமத்துவபுரம், கோட்டமேடு, மூக்காரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி உள்ளிட்ட கிராமங்களில், இன்ஜின் பொருத்தப்பட்ட இயந்திரம் மூலம், பூமிக்கு அடியில் இருந்து பரிசோதனைக்கு, மண் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக  சேலம் அருகே ஜருகுமலையில் 20 அடி உயரத்தில் மண் பரிசோதனை என்ற பெயரில் மலையை துளையிடும் பணி நடைபெற்று வந்தது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தடையை மீறி பணிகள் நடைபெற்று வந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்,  விவசாயிகள் எதிர்பால் அரசு அதிகாரிகள் மண் பரிசோதனையை நிறுத்தி உள்ளனர்.