சுற்றுசூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷூக்கு ஜாமின்: சேலம் கோர்ட்டு வழங்கியது

சேலம்:

சேலம் சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த  சுற்றுசூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சேலம் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வர் பியூஷ் மனுஷ் கடந்த 18ந்தேதி  கைது செய்யப்பட்டார். சேலம் விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கும், சென்னை சேலம் 8 வழி எக்ஸ்பிரஸ் வழித்தட திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இவர்மீது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், பியூஷ் மனுஷ் மாநில, மாவட்ட வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதாகவும், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி சேலம் நீதி மன்றத்தில் பியூஷ் மனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையை தொடர்ந்து நீதி மன்றம் பியூஷ் மனுஷை ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.