சேலம் : மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள  டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியுள்ளது. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த  விவசாயிகள், பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தெற்மேற்கு பருவமழை காரணமாகஓரளவு மழை பெய்துள்ளது. மேலும் வளிமண்டல சுழற்றி காரணமாகவும் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் விரைவில்  தொடங்க உள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஏரிகளில் ஒன்றான டேனிஸ்பேட்டை ஏரியும் நிரம்பி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த  சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக  சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய டேனிஷ்பேட்டை ஊராட்சி அருகே உருவாகும் சரபங்கா உள்பட பல பகுதிகளில்  கால்வாய்களில் மழைநீர் அதிகரித்து வருகிறது. இதனால்,  டேனிஷ்பேட்டை ஏரி முழுமையாக தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால் உபரி நீர், வெளியேற்றப்பட்டு வருகிறது. டேனிஷ்பேட்டை ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில், அப்பகுதி மக்கள், குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடி வருகின்றனர்.

ஏரி நிரம்பி உள்ளதால்,  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என்பதால் ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.