சேலம்

சேலம் மாவட்ட முதல் பெண் ஆட்சியாளர் ரோகிணி மாவட்டத்தில் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி உள்ளார்.  அதில் தான் அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாக கூறி உள்ளார்.

சேலம் மாவட்டத்தில் 1790 ஆம் ஆண்டு முதல் 170 ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.  அனைவரும் ஆண்களே. தற்போது ஆட்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரோகிணி பாஜிபெக்காரே முதல் பெண் ஆட்சியாளர் ஆவார்.  மராட்டிய மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மகள் ரோகிணி.

32 வயதான ரோகிணி இதற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் பணி புரிந்தவர்.  அதனால் தானோ என்னவோ அவர் பேசும் தமிழில் மதுரை வாடை அதிகம் வீசுகிறது.  இவருடைய கணவர் விஜயேந்திர பிடாரி ஒரு ஐ பி எஸ் அதிகாரி.   இதற்கு முன்பு சேலம் ஆட்சியாளராக இருந்த சம்பத், சமூக நல இயக்ககத்தில் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 25 முதல் ரோகிணி பொறுப்பேற்றுள்ளார்.

இவர் தனது சிறுவயதில் தன் தந்தை விவசாயிகள் நல உதவியைப் பெற சோலாப்பூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டதை நேரில் கண்டவர்.  அப்போது ஒன்பது வயதான ரோகிணி, தன் தந்தைக்கு உதவ வேண்டியது யார் பொறுப்பு என கேட்க, தந்தை ஆட்சியாளர் என பதிலளித்திருக்கிறார்.  23 வருடங்கள் கழித்து ரோகிணி, ஆட்சியாளராக பதவி ஏற்றுள்ளார்.  தந்தையின் அலைக்கழிப்பை பார்த்ததும் தாம் ஆட்சியாளராகி ஏழைகளின் துயரத்தை ஒழிக்க அன்றே முடிவெடுத்தாக ரோகிணி கூறுகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

“நான் அரசு பள்ளிகளில் படித்த பெண்,  எனது பொறியியல் பட்டப்படிப்பையும் அரசு கல்லூரியில் தான் முடித்தேன்.  அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நல்ல ஆசிரியர்கள் உள்ளனர்.   ஆனால் அங்கு உள்கட்டமைப்பு சரியாக இல்லை.  நான் சேலம் மாவட்டத்தில் அதை முன்னேற்ற எண்ணம் கொண்டுள்ளேன்.  தற்போது மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தான் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.  எனது முதல் பணி டெங்குவை ஒழிப்பதே ஆகும்.  தமிழ்நாடு அரசின் உன்னத திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகளை தூர் வாரும் பணிகளையும் நான் செவ்வனே செய்து முடிப்பேன்.” என்றார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவர் பணி எவ்வாறு இருக்கும், முதல் பெண் ஆட்சியாளராக அவருடைய பொறுப்பு, மொழியை புரிந்துக் கொள்ளுதல், போன்ற கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

“அரசியல் சூழல் எப்படி இருப்பினும் அரசு என் பணிகளுக்கு நிச்சயம் உதவும் என நான் நம்புகிறேன்.  நான் முதல் பெண் ஆட்சியாளர் என்பதற்காக என்னை பலரும் பாராட்டும் போதே இந்த மாவட்டத்தில் உள்ளோர் பெண்கள் முன்னேற்றத்துக்கு எனக்கு உதவுவார்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.  பெண்கள் முடிவெடுப்பதில் திறமையானவர்கள்.  அதனால் நான் என்னிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களை அவர்களாகவே முடிவெடுக்கும் படியான பணிகளில் அமர்த்துவேன்.  நான் 2009ல் இருந்து தமிழ் மொழியை பேசி வருகிறேன்.  ஆகவே எனக்கு மொழியை புரிந்துக் கொள்ளவோ அல்லது பதிலளிக்கவோ எந்த ஒரு சிரமும் இல்லை.” என கூறினார்.

அறுபத்தைந்து வயதான அவருடைய தந்தை தாம் ஆட்சியாளரானதற்கு பெருமைப் படுவதாகவும், மக்களுக்கு தாம் செய்யும் சேவையே அவருக்கு மேலும் பெருமையை தேடித்தரும் என கூறினார்.