சேலம்:

சேலம் உருக்காலை தனியார் மயம் எதிர்த்து அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 14வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆலை வளாகத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் கடந்த 38ஆண்டுகளாகச்  செயல்பட்டுவரும் உருக்காலை  நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி மத்தியஅரசு தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து, விளம்பரம் வெளியிட்டு உள்ளது.

இந்த தொழிற்சாலையில்  சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 ஆயிரம் தொழி லாளர்கள் மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். தற்போது, இந்த உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு  தீவிரப்படுத்தி உள்ள நிலையில், அங்கு வேலை செய்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

மத்தியஅரசின் முடிவு மாநில அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து  கடந்த 14 நாட்களாக ஆலை நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்திக் கடந்த சில ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங் களில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.