சென்னை:

க்கவாத நோயினாலும், பல்வேறு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுவரும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணை கொலை செய்ய சென்னை  உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.

42வயதான  சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமலும் திரும்பிப் படுக்க முடியாமலும், படுத்த படுக்கையாக உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமானநிலையில் உள்ளது.

கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில், மருத்துவ குழு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்துவருகிறது.  மேலும், சென்னையில் இருந்து வந்த வன உயிரியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் பழனிவேல் ராஜேஷ், டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினரும் சிகிச்சை அளித்து வந்தனர்.

சேலம் கலெக்டர் ரோகினி பார்வையிட்ட காட்சி

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினியும் யானையை பார்த்துச்சென்று, ராஜேஸ்வரி குணமடைய அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில்,  ராஜேஸ்வரியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல், வேதனையுடன் உயிருக்கு போராடி வருகிறது. இதையடுத்து கோவில் யானையான ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.  நோயுற்று உயிருக்கு போராடும்  சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்யலாம் என அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் யானையை பரிசோதித்து 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க சேலம் கால்நடை மருத்துவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிக்கை பெற்ற பின் விதிகளை பின்பற்றி கருணைக் கொலை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.