சகல செல்வங்களையும் பெற உப்பு தீபம்

சகல செல்வங்களையும் பெற உப்பு தீபம்

சகல செல்வங்களையும் பெற உப்பு தீபம் ஏற்றும் முறை – ஒரு பார்வை

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். இருப்பினும் வீட்டில் உப்பு தீபம் ஏற்றி வழிபடுவதினால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி, சகல செல்வங்களையும் பெறலாம்.

உப்பு தீபம் ஏற்றுவதினால் கிடைக்கும் பலன் :-

சிலர் வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? என்பதில் பல சந்தேகங்களுடன் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். நம் வீட்டில் தாராளமாக உப்பு தீபம் ஏற்றும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். உப்பு என்றாலே மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபம் என்று கூறுவார்கள். அவ்வளவு புனிதத்தன்மை வாய்ந்த உப்பினை பெருமைப் படுத்துவதற்காக ஏற்றப்படும் தீபமே உப்பு தீபம். பொதுவாக இந்த உப்பிற்குக் கெட்ட ஆற்றலை நம் வீட்டில் இருந்து வெளியேற்றும் சக்தி அதிகமாகவே உள்ளது. இதனால் எதிர்மறை ஆற்றலின் மூலம் நம் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

உப்பு தீபம் ஏற்றும் முறை :-

மண்பாண்டம் கடைகளில் அகல் விளக்கு நிறைய விற்கப்படும், அங்கு முகம் இல்லாத விளக்கு என்று சொல்லுவார்கள், அந்த விளக்கைப் பெரிதாக ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.

அந்த விளக்கை நன்றாகச் சுத்தம் செய்து, அந்த விளக்கு முழுவதும் மஞ்சளை நன்றாகப் பூசி, குங்குமம் இடுங்கள்.

பின் பித்தளையினாலோ அல்லது செம்பினாலோ செய்யப்பட ஒரு சிறிய தாம்பூலம் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பூலம் தட்டிற்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும்.

பின் அந்த தாம்பூலம் தட்டின் மேல் மஞ்சள் தடவிய அகல் விளக்கினை வைத்து அவற்றில் கல் உப்பினை நிரப்பிக் கொள்ளுங்கள்.

பிறகு இன்னொரு சிறிய அகல் விளக்கினை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த விளக்கிற்கும் மஞ்சள், குங்குமம் வைத்து. உப்பு நிரப்பிய அகல் விளக்கின் மேல் வைத்து, அவற்றில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தைக் கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும்.

இந்த உப்பு தீபத்தைக் காலை மற்றும் மாலை என்று இரு வேளையும், ஏற்றலாம் இந்த தீபத்தை ஏற்றும்பொழுது ஏதேனும் ஸ்லோகம் சொல்லித்தான் விளக்கினை ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் நேரம் :-

உங்களால் முடிந்தால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் 6 மணி அளவிலும், மாலை வேளைகளில் 6 மணியிலிருந்து 8 மணிக்கு முன்பாகவும், இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைக்கலாம். முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது பவுர்ணமி தினத்தன்று இந்த விளக்கை ஏற்றி வைப்பது மிகவும் சிறந்தது.

இவ்வாறு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அதன் முன்பு சிறிது கற்கண்டை நைவேத்தியமாக வைத்து, அதைப் பிரசாதமாகக் குழந்தைகளுக்குத் தருவது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தீபத்தினை முழு நம்பிக்கையோடு ஏற்றி வைத்து அந்த மஹாலக்ஷ்மியை வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாகத் தங்கி விடும்.

பெண்கள் விளக்கு ஏற்றும் போது கைகளில் வளையல் அணிந்து கொண்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும்.