மாதவன் இயக்கும் படத்தில் இசையமைக்கிறார் சாம் சி.எஸ்.

சென்னை: மாதவன் முதன்முதலாக இயக்கும் ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட் (Rocketry: The Nambi Effect) படத்தில் இசையமைக்கிறார் சாம் சி.எஸ்.

மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்திற்கு பின்னணி இசை அமைத்ததன் மூலம் பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

சாம் சி.எஸ். சமீபத்தில் வெளியிட்ட ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, பல மொழிகளில் தயாராகும் ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட் என்ற படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார். உளவு பார்க்கிறார் என்ற போலியான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டு, பத்மபூஷன் விருதும் அளித்து கவுரவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதுதான் இந்தத் திரைப்படம்.

இதில், நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கிறார் மாதவன். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கி‍டைத்தமைக்காக மாதவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சாம் சி.எஸ்.

– மதுரை மாயாண்டி