மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு சமாஜ்வாதி ஆதரவு: அரியணை ஏறுமா காங்கிரஸ்….

போபால்:

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சமநிலையில் நீடித்து வருவதால், அங்கு தொங்கு சட்டமன்றம் உருவாகும் வாய்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

பாஜக ஆட்சி செய்து வரும், மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி சட்டமன்ற தேர்தல் தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் 108 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. அதுபோல பாஜக 110 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றன.

இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் போட்டிப்போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெற்றி பெறும் அனைத்து சுயேட்சைகளையும் இணைத்துகொள்ள தயாராக இருக்கிறோம்  முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான  அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.

தற்போது வரை இழுபறி நீடித்து வரும்  நிலையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகளை பேச்சு வார்த்தைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து உள்ளது.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளை விட அதிக வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 1.5 லட்சம் (1.5%) வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.