டில்லி

மாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி வலுவாக உள்ளதாக பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர்களாகிய மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது தங்கள் கட்சியின் கூட்டணி வரும் 2019 மக்களவை தேர்தலில் தலா 38 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை எனினும் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியிலும் சோனியா காந்தியின் தொகுதியான ரே பரேலியிலும் போட்டி இல்லை என அறிவித்துள்ளனர்.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் லோக் ஜனசக்தி கட்சியும் ஒன்று ஆகும். இந்த கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்து வருகிறார். இக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான், “ஒரு காலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சி ஆகிய இரண்டும் கடும் பகையுடன் இருந்தன. இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என ஒன்றை ஒன்று குற்றம் சாட்டின.

இந்த இரு கட்சிகளின் தலைவர்கள் மீதும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆயினும் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்துளனர். தற்போதைய தேர்தல் முடிவுகளின் நிலவரப்படி இந்த கூட்டணி மிகவும் வலுவுடன் உள்ளது. எனவே இதை எதிர்க்கும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” என தெரிவித்துள்ளார்.