டி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம். இந்துக்களின் கலாச்சாரத்தில் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்த உகந்த மாதமும் ஆடி மாதமே.

வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று அம்மனை  வழிபடலாம் இருந்தாலும் ஆடியில் அம்மனை வழிபடுவது சிறப்பானது.

இதை முன்னோர்கள், சாஸ்திரபடி  இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.

தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்பெறும்.

சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில், தனது பாதையை தெற்கு நோக்கித் திருப்பிச் (தக்ஷ்ணம் அல்லது தட்சிணம்) செல்லும் (அயனம்) காலம். ஆகவே, இது ‘தட்சிணாயன புண்ணியகாலம்’  என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூரியன் வடக்கு (உத்தரம்) நோக்கிச் செல்வதால் ‘உத்தராயண புண்ணிய காலம்’ ஆகும்).

உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும். தட்சிணாயனம் இரவுக் காலமாகவும் அமைகின்றது. அதாவது, பூலோகத்தில் ஒரு வருட காலம் என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும்.  ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

ஆடியின் சிறப்பாக திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன்  திருத்தலம் குறித்து பார்க்கலாம்.

இத்தலத்தின் மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் மாரியம்மன். மாரியம்மன் குடிகொண்டு வரும் சமயபுரம் கோவில் சுமார் 1000-2000 வருடங்களுக்கு முன்பாகவே எழுந்தருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தலத்தில்,  தல விருட்சமாக, அம்மனுக்கு பிடித்த வேம்பு வணங்கப்படுகிறது. இத்தலத்தின் புராண பெயர் கண்ணபுரம் என்று அழைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது.

இத்தலத்தின் பெருமையாக கூறப்படுவது, பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் கண்ணனூரில் உள்ள தன் தாய் ஆதிமாரியம்மனைக் காண வருகிறாள்.

அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். இதை தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர்.

இந்த சமயத்தில், இந்த பகுதியில் இருந்து திருமணம் முடிந்து வெளியூர் சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து சீர் செய்யப்பட்டு வருவது காலங்காலமாக நடைமுறையில் உள்ளது.

ஏழை மக்கள் கூட, தனது பெண்ணுக்கு குறைந்த அளவாவக பணம் கொடுத்து, சீர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பொதுவாக இந்துக்கடவுள் சன்னதிகள் கிழக்கு மற்றும் வடக்கு  நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. ஆனால் கண்ணனூரில் உள்ள தாய் ஆதிமாரியம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.

சமயபுரத்து அம்னைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  இது மாரியம்மன் பிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.

விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சிகயாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் மாரியம்மன் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள்.

தாயைப்பிரிந்து செல்லவதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை.

இந்த மாரியம்மனின் திருவுருவச்சிலை  மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் இளம்பெண்கள் தாலி வரம் வேண்டினால், அது சீக்கிரமே நிறைவேறும் என்பது பெண்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே,  தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.

இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது.

கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம். (காரணம் இத்தலத்து மாரியம்மன் சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால்) ஸ்ரீராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

அம்மன் சன்னதி உருவான வரலாறு….

பண்டைய காலத்தில், இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றதாகவும், அப்போது இடையில் குறுக்கிட்ட கால்வாயில், வீரர்கள் கை, கால்களை அலம்ப ஏதுவாக,  அம்பாளை கரையில் வைத்துவிட்டனர் என்றும், பின்னர்  வீரர்கள்  திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் அந்த சிலை மற்றொரு இடத்தில் இருப்பது தெரிய வந்ததும், அந்த சிலைய எங்கு வைக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அம்மனுக்கு பூ கட்டி கேட்டனர். அதில், அந்த சிலை சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று பூ வந்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து, யானை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அம்மன் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே ஆதி மாரியம்மனாக தற்போதும் காட்சியளித்து வருகிறாள்.

சமயபுரத்தில் இருக்கும் அம்மன், இந்த ஆதியம்மனின்  மகளாக கருதப்படுகிறாள். இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம். இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டு வரப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தென்ன மக்களிடையே பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலம், தினசரி காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னர், மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.