கடந்த 1992ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், அப்போதைய அதிபருமான ஜார்ஜ் புஷ் சீனியர், இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படாமல், முதல் பதவிகால முடிவிலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் போல், தற்போதும் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் 1989 – 1993 வரை அதிபராக இருந்தவர் ஜார்ஜ் புஷ் சீனியர்.

தற்போது, அதே குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், இத்தேர்தலில் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படாமல் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் அந்நாட்டு வாக்காளர்களால்!

அன்று ஜார்ஜ் புஷ் சீனியரை தோற்கடித்தவர் பில் கிளிண்டன். இன்று, டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பவர் ஜோ பைடன்.

அதேசமயம், ஜார்ஜ் புஷ் சீனியருக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜனநாயக கட்சியின் பில் கிளிண்டன், அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் ஜூனியர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த ஜனநாயகக் கட்சியின் பாரக் ஒபாமா ஆகியோர், தலா 2 முறை(8 ஆண்டுகள்) அதிபர் பதவியில் இருந்தவர்கள்.

ஆனால், அந்த வாய்ப்பு குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப்பிற்கு கிடைக்கவில்லை. கடந்த 2016 தேர்தலில், பலரின் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி, ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அதிபரானவர் டிரம்ப்.

ஆனால், கடந்த 28 ஆண்டுகள் முன்பு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு நிகழ்ந்த துரதிருஷ்டம், தற்போது அதே குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் நிகழ்ந்துள்ளது!