புதுடெல்லி: நாடு முழுவதும் லாட்டரி சீட்டுகளுக்கு ஒரேமாதிரியாக 28% வரி விதிப்பது என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுசெய்யப்பட்டது.

ஜிஎஸ்டி 38வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்க‍ேற்றனர். அப்போது நாடு முழுவதும் லாட்டரி சீட்டுகளுக்கு ஒரேமாதிரியான வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், மாநிலத்திற்குள் விற்பனையாகும் லாட்டரிகளுக்கு 12% வரியும், மாநிலத்திற்கு வெளியே விற்பனையாகும் லாட்டரிகளுக்கு 28% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதை ஒரேமாதிரியாக மாற்ற வேண்டி, மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வந்தன.

இதனையடுத்து, நாடு முழுவதும் லாட்டரிக்கு 28% ஜிஎஸ்டி வரிவிதிப்பது குறித்து வாக்கெடுப்பு நடந்தது. அதில் இந்த முடிவுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் விழுந்தன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விதிப்பு தொடர்பாக முதல்முறையாக வாக்கெடுப்பு நடத்தி முடிவு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.