Random image

பாலுக்கும் பென்ஸ் காருக்கும் ஒரே வரி சாத்தியமில்லை: பிரதமர் மோடி

அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை சாத்தியமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் கடந்த வருடம் ஜூலை ஒன்றாம் தேதி ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு  அறிமுகப்படுத்தியது. 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என்று வரி விகிதங்கள் உருவாக்கப்பட்டன.

பால், உப்பு, காய்கறி, முட்டை, மாவு, பருப்பு வகை, லஸ்ஸி, தயிர், வெல்லம், இளநீர், பிரசாதம், இறைச்சி, மீன், தேங்காய், தேங்காய் நார், விலங்குகள் விற்பனை, பதப்படுத்தப்படாத தேயிலை, பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகம், குழந்தைகளுக்கான ஓவியப் புத்தகம், செய்தித்தாள், செவித்திறன் கருவி, கச்சா பட்டு, பருத்தி,கல்வி, மருத்துவம், உயிர்காக்கும் ரத்தம் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு தரப்பட்டது.

 

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு நேற்றோடு ஒரு வருடம் நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று ஜிஎஸ்டி தினத்தை மத்திய அரசு கடைப்பிடித்து. இது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிள் நடத்தப்பட்டன. .

இந்த நிலையில், சுயராஜ்யம் என்ற இணையதளத்துக்குப் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், “மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து வரி முறையில் பெரம் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. 17 வரிகள், 23 கூடுதல் வரிகள் இணைக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றப்பட்டு இருக்கின்றன.

உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி ஆகியவை அகற்றப்பட்டு, எளிமையான மறைமுக வரியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்திருக்கிறோம்” என்றார்.

மேலும், “ஜிஎஸ்டி வரியில் ஒரே மாதிரியான வரிவிதிப்பு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது.  மக்கள் தினமும்  பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க முடியுமா?” என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

“தற்போது ஏழை, எளிய மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு 0 முதல் 5 சதவிகிதம் மட்டுமே  ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அவை அனைத்தையும் 18 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றால் மக்களின் நிலை என்னவாகும்.

காங்கிரஸிஸ் கட்சியில் உள்ள ம் சில நண்பர்கள் ஒரே விகித ஜிஎஸ்டி பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  அத்தியாவசியப் பொருட்கள் மீதும் 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம்” என்று மோடி  விமர்சித்தார்.