சில தினங்களுக்கு முன்பு சம்யுக்தா ஹெக்டேவை பெங்களூருவில் உள்ள ஒரு பூங்காவில் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி என்பவர் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாயின.சம்யுக்தா ஹெக்டேவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின.

சம்யுக்தாவும் அவரது நண்பர்களும் பூங்காவில் இருந்தவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் சப்தமாக இசை வைத்து உடற்பயிற்சி செய்ததாகவும், அதைக் கேட்டபோது தன்னை அசிங்கமாகப் பேசிய பிறகுதான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும் கவிதா ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும் பல்வேறு முன்னணி நடிகைகள் சம்யுக்தாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிடவே கவிதா ரெட்டி பகிரங்க மன்னிப்புக் கோருவதாக வீடியோவும், அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் :-

https://www.instagram.com/p/CE4HC18lFEo/

“எனக்குக் கிடைத்து வரும் ஆதரவு, அன்பு, எனக்கான பதிவுகள், கிண்டல்கள், ட்வீட்டுகள் என அனைத்துக்கும் நன்றி. அவைதான் (எனது) இந்தக் குரலைப் பெரிதாகக் கேட்க வைத்திருக்கின்றன.

ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கவிதா ரெட்டியின் மன்னிப்பு திருப்திகரமாகவும், உண்மையானதாகவும் இல்லை. பொதுவில் மன்னிப்பு கேட்ட 16 மணி நேரம் வரை அவர் தனது பதிவுகளையோ, ட்வீட்டுகளையோ நீக்கவில்லை. இது இந்த மன்னிப்பை அவர் எவ்வளவு விளையாட்டாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பதையும், பொதுமக்கள் முன் தனது பெயர் பாதிக்கப்படுவதால், அதைக் காப்பாற்றச் செய்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. இதையும் உங்களில் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆனால், இந்தப் பிரச்சினையில் அவர் மீது கவனம் செலுத்தாமல், நடந்த சம்பவத்தின் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன்.

கவிதா ரெட்டியின் வயதை மனதில் வைத்து அவருக்கெதிரான வழக்கை நான் தொடரப்போவதில்லை. அதில் ஆர்வமும் இல்லை. இதுகுறித்து நேற்று காவல்துறையினரிடமும் முறையாகக் கோரியுள்ளேன்.

ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தப் பூங்காவில் எங்களை மிரட்டி, பயப்பட வைத்ததற்காக, அனில் ரெட்டி மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார் .