புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஜுகு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்திய பெண்….

ஜுகு:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப்  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மும்பை  ஜுகு கடற்கரையில் பெண் ஒருவர் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார். கடற்கரைக்கு வந்த ஏராளமான பொதுமக்களும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மும்பை ஜுகு கடற்கரை

கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலை வெடிகுண்டு தாக்கதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், பல இடங்களில் அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தள்ளுவண்டியில் ‘வடா பாவ்’  எனப்படும் வடஇந்திய உணவான ஸ்நாக்ஸ்  வியாபாரம் செய்து வரும் வியாபாரியின் மனைவியான லக்‌ஷ்மி கவ்ட் என்பவர்,  உயிரி ழந்த வீரர்களின் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் ஒரு டன் மணலை பயன்படுத்தி, 9 மணி நேரம் அயராது  உழைத்து, மூவர்ண கொடியின் நிறத்தில் அழகிய மணல் ஓவியம் ஒன்றை உருவாக்கி பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

விசாகப்பட்டினம் கடற்கரை

இந்த சிற்பத்தை கடற்கரைக்கு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு பிரமித்ததோடு, மலர்கள் வைத்து தங்களது அஞ்சலியையும் செலுத்தினர்.

அதுபோல  ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயகம் மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.அதுபோல  பெங்களூரில் உள்ள வாக்தேவி விலாஸ் பள்ளியிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஒடிசா பூரி கடற்கரை

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடற்கரையில் மணல் ஓவியங்கள் மூலம் புல்வாமா குண்டு வெடிப்பில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெங்களூரு பள்ளி ஒன்றில்