ஆமைகளை பாதுகாக்க நடத்தப்பட்ட ‘மணல் சிற்பம் போட்டி:’ 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

--

சென்னை,

சுற்றுச்சூழல் காரணமாக அழிந்து வரும் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  சென்னை பாலவாக்கம் கடற்கரை மணலில் ஆமை சிற்பங்கள் செய்யும் போட்டியை நடைபெற்றது.

தமிழக கடற்பகுதிகளில் வாழ்ந்து வரும் “ஆலிவ் ரிட்லி” இன கடல் ஆமைகள்  அழிந்துவரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் கேடு என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னை பாலவாக்கம் கடற்கரையில் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியாக, மணலில் ஆமை சிற்பம் வடிக்கும் போட்டி  நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்  கலந்து கொண்டு ஆமை மணல் சிற்பங்களை வடிவமைத்தனர்.

அவர்கள் பல வகையான ஆமைகளை மணலால் வடித்திருந்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

கடலில் கலக்கப்படும் மாசுக்காளல்,  ஆலிவ் ரிட்லி எனப்படும் தமிழக கடற்கரையில் வசித்து வரும் கடல் ஆமைகள் பெருமளவில் அழிந்து வருகின்றன. இந்த ஆமைகள்,  60 முதல் 70 செமீ நீளம் வரை வளரக் கூடியவை.  சராசரியாக 40 கிலோ வரை எடை உள்ளது.

இந்த இனத்தில்  ஆண் ஆமை நீரைவிட்டு வெளியே வருவது கிடையாது. ஆனால், பெண் ஆமைகள் மட்டுமே இன விருத்திக்காக, கடற்கரைக்கு வந்து முட்டைகளை இட்டு வருகிறது. பொதுவாக  டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்த பெண் ஆமைகள் கடற்கரை பகுதிக்கு வந்து பள்ளம் தோண்டி முட்டைகளை இட்டு செல்கிறது.

இந்த ஆமை இனத்தை பாதுகாக்கவே சில தனியார் அமைப்புகள் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.