ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: மக்கள் அச்சம்

சிட்னி:

ஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி முழுவதையும் திடீரெனத் தாக்கிய புழுதிப் புயல் காரணமாக வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அங்குள்ள மக்கள் சுமார் 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இது பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நியூ சவுத் வேல்ஸில், ப்ரோகன் ஹில்லின் மேற்கில் இருந்து சிட்னியை நோக்கி 500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதித்தது. விமானப்போக்குவரத்தும் பாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

புழுதிபுயலின்போது,  நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் வறண்ட தூசியை கிளப்பி சாலைகளே கண்களுக்கு தெரியாத வண்ணம் கடுமையான காற்று வீசியதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த புழுதிப் புயல் காரணமாக நகரில் காற்று மாசின் அளவு பலமடங்காக உயந்துள்ளதால் ஆஸ்துமா உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 2009-ம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப்புயலைவிட இது மிக கடுமையாக இருந்ததாக பலரும் தெரிவிதுள்ளனர்.