லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்து தயாரிக்கும் படம் சண்டைக்கோழி 2. இதன் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

படத்தின் வசனங்கள் மதுரை வட்டார வழக்கில்  இருந்தால்  நன்றாக இருக்கும் என்று லிங்குசாமி நினைத்திருக்கிறார். இதையடுத்து பத்திரிகையாளரும் பி.ஆர்.ஓ.வுமான வி.கே. சுந்தரிடம்  எழுதித்தர கேட்டிருக்கிறார். இதற்கு மூன்று லட்ச ரூபாய் சம்பளம் என்றும் சொல்லியிருக்கிறார்.

இரவு பகலாக வி.கே. சுந்தர் வசனங்களை எழுதித்தந்தார். ஆனால் பேசியபடி மூன்று லட்ச ரூபாய் வரவில்லை. கேட்டு கேட்டு…. நொந்துபோய்விட்டார் சுந்தர்.

பிறகு மூன்று லட்ச ரூபாய் முடியாது ஒரு லட்ச ரூபாய்தான் தர முடியும் என்று லிங்குசாமி தரப்பு சொல்ல.. அதற்கும் வி.கே. சுந்தர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு சிறுகச் சிறுக ஐம்பதாயிரம் ரூபாய் வரை மட்டுமே வி.கே. சுந்தர் பெற்றிருக்கிறார்.

மீதிப்பணம் வரவேயில்லை.

லிங்குசாமி

ஒருகட்டத்தில், “சுந்தர் எழுதிக்கொடுத்த வசனங்களை படத்தில் பயன்படுத்தவே இல்லை” என்று லிங்குசாமி சொல்லியிருக்கிறார்.

இது குறித்த வி.கே. சுந்தரின் ஆதங்கத்தை நமது பத்திரிகை டாட் காம் இதழிலும் வெளியிட்டோம்.

சுந்தர்

“படத்தில் எனது வசனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஒரு வாதத்துக்காக பயன்படுத்தவில்லை என்று வைத்துக்கொண்டாலும், உழைப்புக்கு பேசிய தொகையை தருவதுதானே முறை” என்று நம்மிடம் தெரிவித்திருந்தார் வி.கே. சுந்தர்.

இந்த நிலையில், “சண்டைக்கோழி 2 படத்தில் நான் எழுதிய வசனங்களை பயன்படுத்தவில்லை என்று இயக்குநர் லிங்குசாமி சொல்கிறார். அந்தப்படத்துக்கா நான் எழுதிய வசனங்களில் ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம். அவற்றை முகநூலில் பதிவிடப்போகிறேன். தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும்” என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார் வி.கே. சுந்தர்.

சுந்தரின் முகநூல் பதிவு

“படம் வெளிவரும் முன்பே முகநூலில் வசனம் வெளியாகும் புதுமை நடக்கப்போகிறதா.. அல்லது தனது  தவறை உணர்ந்து விகே சுந்தருக்கு உரிய தொகையை லிங்குசாமி கொடுப்பாரா” என்பதுதான் இப்போதையே கேள்வி.

கூடுதல் தகவல்: லிங்குசாமியும் பத்திரிகையாளராக இருந்தவர்தான்.