டில்லி

பா ஜ க அரசும் இன்னொரு ஐக்கிய முன்னணி கூட்டணி அரசாகத்தான் உள்ளது என சங் பரிவார் தலைவர் சஜி நாராயணன் கூறி உள்ளார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிலாளர் சங்க அமைப்பு பாரதிய மஸ்தூர் சங் ஆகும்.  இதன் தலைவரும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முக்கியப் பிரமுகருமான சஜி நாராயணன் சமீபத்தில் அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் பிரதமர் மோடியின் அரசை விமர்சித்துள்ளார்.

அந்தக் கட்டுரையில், “பிரதமர் மோடியின் அரசு ஏழைகளுக்காக எதுவும் செய்வதில்லை.  அரசின் திட்டங்கள் எல்லாமே கார்பொரேட் கம்பெனிகளுக்கே சாதகமாக இருக்கின்றன.  இந்த ஆட்சியில் உருவாக்கப்படும் அனைத்து பொருளாதாரக் கொள்கைககள் மற்றும் நலத் திட்டங்களின் மூலம் கார்பரேட் கம்பெனிகள்தான் அதிகம் லாபம் ஈட்டி வருகின்றன.  கார்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார ஆலோசகர்கள் இந்த அரசின் நடவடிக்கைகளாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பிரதமர் மோடி அறிவித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளையும், தொழிலாளர் நலத் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அரசு இதற்கு முந்தைய ஐக்கிய முன்னணி கூட்டணியின் அரசைப் போலவே உள்ளது.  சொல்லப்போனால் இந்த அரசு முந்தைய அரசின் தொடர்ச்சி என்றோ அல்லது இன்னொரு ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு என்றோதான் கருத முடிகிறது.

முந்தைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் தொழிலாளர் திட்டங்களையும் கொஞ்சம் ஒப்பனை செய்து மோடியின் அரசு நடத்தி வருகிறது.  பிரதமர் மோடியின் புதிய திட்டங்கள் எல்லாமே ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தி வருகிறது.   இந்த திட்டங்களினால் பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைந்து வருகின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பா ஜ க என்பது ஆர் எஸ் எஸ் சின் இன்னொரு அங்கம் எனவே பலரும் குறிப்பிட்டு வரும் இவ்வேளையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஜி நாராயணனே பா ஜ க ஆட்சியை இவ்வாறு விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.