சனி பெயர்ச்சி 2020-2023: 12 ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள் – வேதா கோபாலன்

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிபகவான்  இன்று (2020  டிசம்பர் 27ஆம் தேதி)  தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெற்றுள்ளார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.

இதன் பலனாக என்னவெல்லாம் நிகழப்போகின்றன? எந்தெந்த ராசியினர் நன்மைபெறப்போகிறார்கள்? யாருக்கெல்லாம் தீமை விளையும் என்ற ஒரு பெருங்கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். அவர் ஆட்சி பலம் பெறுவதால் (தன் வீட்டிலேயே அமரவிருப்பதால்) அனேகமாக யாருக்குமே அதிகக் கெடுபலன்கள் ஏற்படாது.

இப்பெயர்ச்சியால மிக அதிக நன்மையடையப்போகிறவர்கள், ரிஷபம் (ஏனெனில் பாக்கியாதிபதி பலம் பெறுகிறார் மற்றும் அஷ்டம சனி விலகுகிறார்), விருச்சிகம் (ஏனெனில் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), கன்னி (ஏனெனில் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), சிம்மம் (ஏனெனில் சனி மறைவிடத்தில் அமரகிறார்), மீனம் (ஏனெனில் லாபஸ்தானத்துக்கு வருகிறார்).‘‘

சனிபகவான் நீதிமான் என்பதை நீங்க அறிவீங்க. சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று  யாரும் பயப்பட வேண்டாம். அவர் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார்.  தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். சிலருக்கு அனுபவப் படிப்பினைகளை கொடுத்து செம்மைப்படுத்தி வாழ்வில் உயர்த்துவார் சனிபகவான்.

சற்று ஜாக்கிரதையாய் இருந்து பரிகாரங்களை கவனத்துடன் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மிதுனம் (ஏனெனில் அஷ்டம சனி), துலாம் (ஏனெனில் அர்தாஷ்டம சனி), மகரம் (ஏனெனில் ஜென்மசனி), கும்பம் (புதிதாக ஏழரைச்சனி துவங்கவிருக்கிறது).

மேலும் தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை.

சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

இனி ஒவ்வொரு ராசிக்கும் சனி பகவான் தன் பெயர்ச்சியின்முலம் என்னென்ன பலன்களை அளிப்பார் என்று பார்ப்போம்.

மேஷம்

அசுவினி: பணம் என்றால் என்ன, அதை எப்படிச் சம்பாதிப்பது, வந்த பணத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்வது போன்ற விஷயங்களைச் சரியானபடி அறிந்துகொள்வீங்க. பதவி/ சம்பள உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீங்க. சில பணிகளைப் போராடி முடிப்பீங்க. மேலதிகாரி ஹெல்ப் செய்வாரு.

பரணி: கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கிடுங்க. தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிடுங்க. பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீங்க. வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீங்க..

கார்த்திகை, 1ம் பாதம்: குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீங்க. பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4:. புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீங்க. நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீங்க. குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீங்க. சுயதொழில் செய்வோருக்குப் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும்.

ரோகிணி: வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீங்க. பகை வர்களும் நண்பர்கள் ஆவாங்க. நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவை உண்டாகும். நிறைய உழைப்பீங்க. உழைப்புக்கு ஏற்ற நல்ல ஊதியம் பெறுவீங்க.

மிருகசீரிடம் 1,2: அடகில் இருந்த நகைகளை மீட்பீங்க. எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கிடுங்க. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன்கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். அரசுத் துறையினருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். எனினும், தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம், 3,4: 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வாங்க. கவனம் தேவை. எனினும் சாதுர்யமாகப் பேசி சிரமங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியடைவீங்க.  எதிர்பார்த்த பணம் வரும். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை கற்பனையாக சந்தேகப்படுவீங்க. வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவாதிரை: மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

புனர்பூசம், 1,2,3: செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கிடுங்க. திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது. எத்தனை உழைக்கிறீர்களோ அவ்வளவு லாபம் உண்டு.

கடகம்

புனர்பூசம்,4: திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீங்க. அயல்நாடு சென்று வருவீங்க. அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் லேசாக பாதிக்கப்படக்கூடும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்வது நல்லது.

பூசம்: வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. ரோகிணி நற்பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் லாபமும் நன்மையும் சந்தோஷமும் கூடுதலாகும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கணுங்க.

ஆயில்யம்: முதல் வருடத்தில் மட்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் லாபம் உண்டு. உங்களில் சிலருக்கு எதிர்பாராத யோகம் உண்டு. சிலருக்குப் புதையல் கூடக் கிடைக்கும். (அல்லது அதற்குச் சமமான விஷயங்கள் கிடைக்கும்.) எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படாமல் கவனமாக இருங்கள். சிலர், வேலை விஷயமாக மனைவியைப் பிரிந்து வெளிமாநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ செல்வீங்க. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

சிம்மம்

மகம்: இளைஞர்களுக்குத் தடைகள் அனைத்தும் விலகி மேன்மையான நல்ல பலன்கள் நடக்கும். இந்தப் பெயர்ச்சியின் மூலமாக நீங்க தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். தேவையான அனைத்தும் இப்போது கிடைத்தே தீரும். இதுவரை தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை இனி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களே! விமர்சனத்தைத் தவிர்க்கணுங்க.

பூரம்: எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம்  உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வாங்க. ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ – மாணவிகளே! படிப்பில் அலட்சியம் கூடாது. அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீங்க.

உத்திரம்,1: சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீங்க. எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும்.அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. அல்லது தொல்லைகள் முன்பைவிட மிகவும் குறையும். மேலதிகாரிகள் உதவி செய்வாங்க. உங்களின் பணியாள்களும் ஒத்துழைப்பு தருவாங்க. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். இளம் வயதினர் விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே! சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக்குங்க.

கன்னி

உத்திரம்,2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.  உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கிடுங்க. இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். அருமையான உழைப்பின் காரணமாகப் பணவரவு அதிகரிக்கும்

அஸ்தம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவாங்க. உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும்.

சித்திரை, 1,2: தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீங்க., பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீங்க. மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

 துலாம்

சித்திரை, 3,4: சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீங்க. மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீங்க. எதிலும் ஒரு நிதானப்போக்கு இருந்தாலும் முடிவில் நன்மைதான் விளையும்.  னை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.

சுவாதி: பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீங்க. குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீங்க. உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவாங்க.

விசாகம் 1,2,3: பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கிடுங்க. குடும்பத்தில் ஒருவருக்கு, சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீங்க. அதற்கான சம்பளமும் உயரும். சில பணிகளை அநாயாசமாக முடிப்பீங்க.

விருச்சிகம்

விசாகம்,4: வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதை இருக்கும். வியாபாரிகளுக்குத் தொழில் நல்லபடியாக நடக்கும். ஆர்டர்கள் நிறைய கிடைத்து மேன்மை அடைவீங்க. சகோதர – சகோதரிகள் வழியில் உங்களுக்குச் செலவுகள் இருக்கலாம். வியாபாரிகளே! அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும்.

அனுஷம்: புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

 கேட்டை: விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீங்க. கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். மாணவர்கள் முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீங்க. ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பாங்க. கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீங்க. வருமானம் உயரும்.

தனுசு

மூலம்:. இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். வீடு, வாகனம், உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறை பலன்களும், சாதகமற்ற நிலைகளும் இருக்கும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வரும் என்றாலும் பிரச்னைகள் தீவிரமாகாது.

பூராடம்: திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்குத் திருமணம் நடக்கும். ஏற்கெனவே மணமாகி முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு, இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக தொடங்கும். பங்குச் சந்தை விவகாரங்களில் கவனமாக இருங்கள். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் துறைகளில் முதலீடு செய்யவேண்டாம். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கணுங்க. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

உத்திராடம்,1: எண்ணத்தில் தடுமாற்றம் உண்டாகி தவறான முடிவு எடுக்க வாய்ப்பு உண்டு; கவனம் தேவை. குறிப்பாக பண விவகாரங்களில் கவனமாக இருங்கள். அடுத்தவர் கடனுக்குப் பொறுப்பேற்பதும் இப்போது வேண்டாம். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, மிதமான நற்பலன்களைத் தரும். கணவன் – மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 மகரம்

உத்திராடம்,2,3,4: சனியின் தனிப்பட்ட குணமான பிடிவாதம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிலும் வளைந்துகொடுக்க மாட்டீர்கள். சனியின் பார்வை உடல், மனம் இரண்டையும் இறுக்கமாக்கும் என்பது விதி. இப்பெயர்ச்சி அவசியமே இல்லாமல் கற்பனைக்  கவலைகளைக் கொடுத்து மனத்தையும் உடலையும் அலைக்கழிக்கும் என்பதால், சகல விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஒரு புதிய உத்வேகம் தரும் சூழலில் அடியெடுத்து வைக்க இருக்கிறீர்கள்.

திருவோணம்: சிலருக்கு ஆன்மிக உணர்வுகள் அதிகமாகும். வெகுநாள்களாக தரிசிக்கவேண்டும் என்று நீங்க மனத்தின் நினைத்திருந்த தலங்களுக்குச் சென்று திருப்தியுடன் வழிபட்டு வருவீங்க. ஞானிகளின் ஆசியும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும் ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். பிறந்த ஜாதகப்படி யோகமான தசாபுக்திகள் உங்களுக்கு நடக்குமாயின், எதிர்கால வெற்றிக்கான அஸ்திவாரட்தை இப்போதே அமைப்பீங்க. சனி அதற்கு உதவுவார்.

அவிட்டம்,1,2: எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீங்க. ஜன்மச் சனி என்பதால், உடல் ஆரோக்கியத் தில் மட்டும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வாங்க. கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்கள் கடன் சிக்கலில் இருந்து விடுபடுவீங்க.

கும்பம்

அவிட்டம், 3,4: திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீங்க. கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீங்க. போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும் நீங்கிடுங்க.

சதயம்: கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிடுங்க. பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வாங்க. சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீங்க. வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைகள் விலகி, நடப்பவை அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும்.

பூரட்டாதி,1,2,3: தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும். கடந்த காலங்களில் மகன்-மகளால் ஏற்பட்ட மன வருத்தங்களும் நீங்கிடுங்க. மகனுக்கோ, மகளுக்கோ. இருந்து வந்த தடை,தாமதங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதி பிறக்கும்; மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்

மீனம்

பூரட்டாதி, 4: அரசியல்புள்ளிகள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீங்க. சிலர் புது வீடு வாங்குவீங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீங்க. மனஅழுத்தத்தில் தவிப்பதைத் தவிருங்கள். குடிப் பழக்கம் இருப்பவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்துவது அவசியம். வம்பு, வழக்குகள்

உத்திரட்டாதி:   மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி மற்றும் உத்யோகம் அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீங்க. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும். நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்க, இனி விஸ்வரூபம் எடுப்பீங்க. போட்டிகளில் வெற்றி பெறுவீங்க. கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

ரேவதி:   மாணவ- மாணவிகள் பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீங்க. தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீங்க. கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீங்க. சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். தேவையற்ற, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கங்களிலிருந்தும் கூடா நட்புகளிடமிருந்தும் விலகி, மனத்தை நல்லவிஷயங்களில் திசை திருப்ப ஆரம்பிச்சிருப்பீங்களே. சபாஷ். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீங்க.

சனி பகவானுக்கான பரிகாரங்கள்(பிரீதிகள்) : எள் தீபம் ஏற்றுதல், காகத்துக்கு தினமும் சாதம் வைத்தல். இரும்பு விளக்கில் நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றுதல், கருப்பு நாய்க்கு உணவு படைத்தல், ஏழை எளியோருக்கு உணவு அளித்தல்,.      நீல நிறப் பொருட்கள் மற்றும் உடைகளை தானம் செய்தல், எள்ளால் செய்த இனிப்பு விநியோகம் செய்தல், திருநள்ளாறு, குச்சனூர் சென்று வழிபடுதல், சனிக்கிழமைதோரும் அனுமனுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து மாலை சாற்றி வெள்ளை சாற்றி வழிபடுதல் அனுமான் சாலீசா சொல்லுதல் ஆகியவை சிறந்த சனிப்ரீதிகள் ஆகும்.

You may have missed