இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ள சானியா மிர்ஸா – என்ன சொல்கிறார்?

புதுடெல்லி: விளையாட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ள சானியா மிர்ஸா, இனிமேல் தனக்கு கிடைக்கவுள்ள ஒவ்வொரு அங்கீகாரமும் கூடுதல் போனஸ்தான் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கணையாக திகழ்ந்தவர் சானியா மிர்ஸா. திருமணமாகி கருவுற்ற நிலையில் தனது விளையாட்டிற்கு இடைவெளி விட்டார். தற்போது மகன் பிறந்துள்ள நிலையில், 32 சானியா மிர்ஸா மீண்டும் தீவிரப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

ஒரு நாளைக்கு 4 மணிநேரம் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சானியா, இதன்மூலம் மொத்தம் 26 கிலோ எடையையும் குறைத்துள்ளார். திருமணத்திற்கு முந்தைய தனது டென்னிஸ் கேரியரில், மொத்தம் 6 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் 3 பட்டங்கள் கலப்பு முறையிலானவை.

இதுதவிர, நம்பர் ஒன் இடத்தைப் பெற்றதோடு, பல்வேறு வகையான போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

“நான் டென்னிஸ் விளையாட்டில் என்ன சாதிக்க வேண்டுமென நினைத்தேனோ, அதை சாதித்துவிட்டேன். எனது அடுத்த இன்னிங்ஸ் விரைவில் துவங்கவுள்ளது. அடுத்தாண்டு ஜனவரியில் அது துவங்கலாம். இனிமேல் எனக்கு கிடைக்கவுள்ள ஒவ்வொரு அங்கீகாரமும் கூடுதல் போனஸ்தான்” என்றுள்ளார் சானியா மிர்ஸா.