ஃபெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு தேர்வான முதல் இந்தியரானார் சானியா மிர்ஸா..!

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, டென்னிஸ் உலகின் புகழ்பெற்ற ஃபெட் கோப்பை ஹார்ட் விருதை வென்றுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோருக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கிடைக்கும் பரிசுத்தொகையை, அவர் சேவை காரியங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்த விருதுக்கு தேர்வானார் சானியா மிர்ஸா. மொத்தம் பதிவான 16985 வாக்குகளில், இவர் 10000க்கும் அதிகமான வாக்குகளை அள்ளினார்.

ஆசியா/ஓசியானியா பிரிவில் இவர் இந்த விருதுக்குப் போட்டியிட்டு வென்றுள்ளார். சில ஆண்டுகள் இடைவெளியை அடுத்து, களம் புகுந்த இவருக்கு, இந்த விருது பெரிய அங்கீகாரமாக ஆகியுள்ளது. கடந்த மே 1ம் தேதி முதல் இந்த விருதுக்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடைபெற்று வந்தது.

பதிவான மொத்த வாக்குகளில் 60% க்கு மேல் சானியாவுக்கு விழுந்துள்ளது. இதுகுறித்து பெருமைப் பொங்க சானியா மிர்ஸா கூறியதாவது, “ஒரு முதல் இந்தியராக இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமை வாய்ந்தது. இந்த விருதை நான் எனது நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன்.

எனது ரசிகர்கள் மற்றும் எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில், என் நாட்டிற்கு அதிகமான பெருமைகள் கிடைக்க காரணமாக இருக்க முடியும் என்றும் நம்புகிறேன்” என்றார் சானியா மிர்ஸா.