மஹாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், மீண்டும் ஒருமுறை முதல்வர் ஆக கனவு காண வேண்டாம் என்றும் சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

மஹாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிகாலம் முடிவதால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். இதற்காக இன்று மாலை ஆளுநரை சந்தித்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஏனெனினும் புதிய அரசு அமையும் வரை, பொறுப்பு முதல்வராக பட்னாவிஸ் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ”மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம் மீண்டும் ஒருமுறை முதல்வராக கனவு காண வேண்டாம். சிவசேனா தலைமையில் தான் மகாராஷ்டிராவில் இனிமேல் ஆட்சியமையும். அடுத்த முதல்வர் எங்கள் கட்சியில் இருந்து தான் பதவியேற்பார்” என தெரிவித்துள்ளார்