திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.

பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக  அருள்மிகு சங்கரநாராயணன் கோவில்  திகழ்கிறது.  உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ).

சோழ நாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது.

ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள்.

கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம்.

இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்.

 சங்கரன்கோவிலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந்துள்ளது. அவற்றில்,  நிலம் (மண்) ஸ்தலமாக சங்கரன் கோவில் சங்கர லிங்க சுவாமி கோவிலும், நீர் (தண்ணீர்) ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவிலும், நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலும், காற்று (வாயு) ஸ்தலமாக தென்மலை திரிபுரநாத சுவாமி கோவி லும், ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

கோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது . சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது . அம்பிகை கோவிலில் தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை உள்ளது . பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது .

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது . திங்கள் கிழமை மலர்ப் பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும், வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சார்த்தபடுகிறது . வொவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது .

தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது . சிறுப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது . கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும் , உச்சி வேளையிலும் , சாயங்கால பூஜையிலும் , இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பும் , 4 வேலைகள் அபிஷேகம் நடக்கிறது . இங்கு தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவதும்,முடி காணிக்கையும், மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது .

இறைவனின் ஐந்து முகங்கள்

  1. ஈசானம் – பளிங்கி நிறம் -நடுவில் இருக்கும் முகம்.
  2. தத்புருஷம் – பொன்னிறம் -கிழக்கில் இருக்கும் முகம்
  3. அகோரம் – கருமை நிறம் -தெற்கில் இருக்கும் முகம்.
  4. வாமதேவம் – சிவப்பு நிறம் -வடக்கில் இருக்கும் முகம்.
  5. சத்தியோ ஜாதகம் – வெண்மை நிறம் – மேற்கில் இருக்கும் முகம்.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திருவிழாக்களின் விபரங்களை பக்தர்களாகிய நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

  1. சித்திரைப் பெருந்திருவிழா – 48 நாட்கள்.
  2. ஆடித்தபசு திருவிழா – 12 நாட்கள்.
  3. நவராத்திரி லட்சார்ச்சனை – 9 நாட்கள்.
  4. ஐப்பசி திருக்கல்யாணம் – 10 நாட்கள்.
  5. கந்தசஷ்டி திருவிழா – 6 நாட்கள்.
  6. திருவெம்பாவை திருவிழா – 10 நாட்கள்.
  7. தை மாதம் கடைசி வெள்ளி அன்று ஆவுடைப்பொய்கை தெப்பத் தேரோட்டம்
  1. நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு – மாதம் 2முறை.
  2. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆடிச்சுற்று

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நாள் முதல் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறை வேற்ற அன்னை கோமதி அம்பாளை வேண்டி ஆடிச்சுற்றாக கோவிலின் உட்பிரகாரத்தை 108 முறை சுற்றி வரும் நிகழ்ச்சி இங்கு கோலாகலமாக நடந்து வருகிறது.

பக்தர்கள் ஆடிச்சுற்றில் கோவிலின் பிரகாரங்களை பக்தர்கள் சுற்றி வரும்போது இது கடலா இல்லை கடல் அலையா என்பது போன்று பக்தர்கள் கூட் டம் கோவிலில் சங்கமித்து இருக்கும். இந்த ஆடிச்சுற்றில் ஆண்கள் முதல் பெண்கள் வரையிலும், சிறுவர்கள் முதல் சிறுமியர்கள் வரை யிலும் கூட்டம் கூட்டமாக ஆடிச்சுற்று சுற்றி வரு வதை நாம் பார்க்க முடியும்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சிய ளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், .அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இக்கோவிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகளையும் சேர்த்து ஒரு பிரகாரமாக இருக்கும் கோவிலின் வெளிப்பிரகாரங்களை பக்தர்கள் 108 முறை சுற்றி வழிபடுவதையே ஆடிச்சுற்று என்கிறோம்.

சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும்  மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரியஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.

இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி அமைத்துள்ளது. பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைகுமாரியாகவும் , குண்டலினி சக்தியாகவும், பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார் .

எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக சங்கரநயினார் கோவில், கால சர்ப் தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் , ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது,  செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது.

வாழ்வில் ஒருமுறையாவது, சங்கரன்கோவில் சென்று சங்கரநாராயணரையும், கோமதி அம்பாளையும் தரிசித்து புண்ணியம் பெறுவோம்.

ஓம் சிவாய… சர்வம் சிவமயம்…