மதுரை:

ங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக முதலில் ஒருவருக்கும், பின்னர்  ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, மற்றொருவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் பதவி ஏற்க நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்,  சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில், திருமதி தேவி எஸ்.மாங்குடி (காங்கிரஸ்), திருமதி  பிரியதர்சினி அய்யப்பன் (சுயேச்சை)  ஆகிய இருவர் போட்டியிட்டனர்.  தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில்,  திருமதி தேவிமாங்குடி வெற்றி பெற்றதாக அவருக்கு தேர்தல் அலுவலர் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார். அப்போது, அங்கு வந்த பிரியதர்ஷினி வாக்குவாதம் செய்து, தேவி மாங்குடியிடம் இருந்து சான்றிதழை பிடுங்கி, ஒரு வாக்குப்பெட்டி எண்ணப்பட வில்லை என்று தகராறு செய்தார்.

இது தொடர்பான வீடியோவும் வைலானது.

இந்த நிலையில், பிரச்சினை குறித்து, அங்கு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர்  மறு வாக்கு எண்ண  உத்தர விட்டார். இதையடுத்து, தேர்தல் முடிவை அறிவிக்கும் அதிகாரி, நள்ளிரவிலேயே, தேவி மாங்குடி வெற்றி ரத்து செய்யப்படுவதாகவும் மறு வாக்கு நடத்தப்படும் என அறிவித்து, அதிகாலையில் தேவியின் முகவர்கள் இல்லாத நிலையில்  பிரியதர்ஷினியின், முகவர்களை மட்டும் வைத்து மறுவாக்கு நடத்தி, 63 வாக்குகள் வித்தியாசத்தில். பிரியதர்ஷினி  வெற்றி பெற்றதாகவும் அறிவித்து, சான்றிதழ் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஒலிபெருக்கியில் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் அறிவித்தனர்.

ஆனால்,  தேவி மாங்குடி, பிரியதர்ஷினி ஐயப்பன் ஆகிய இருவரும் தாங்கள் வெற்றிபெற்றதாக காரைக்குடி சங்கராபுரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் யார் வெற்றி பெற்றது யார் என்று குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தேவி மாங்குடி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுத்தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு விசாரணை நடத்தி, சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

மேலும்,  இந்த வழக்கு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.