சங்கர் ஆணவக்கொலை வழக்கு: தீர்ப்பை, எதிர்த்து  நீதிமன்ற வளாகத்திலேயே  முழக்கம்.. பரபரப்பு

 திருப்பூர்:

டுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளில் ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தீர்ப்பை எழுத்து முழக்கமிட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலைப்பேட்டை சங்கர்  ஆணவக்ககொலை வழக்கு திருப்பூரில் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துந்தது. இந்த நிலையில் இன்று நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.

சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, நீதிமன்ற வளாகத்திற்குள் ஸ்கார்பியோ காரில் வந்திறங்கிய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகி கர்ணன் என்பவரும், அவருடன் வந்தவர்களும், தீர்ப்பை எதிர்த்து ஆவேசமாக முழக்கமிடத் தொடங்கினர். இதைக் கண்ட  காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

அதற்குள் அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர், “நீதிமன்ற வளாகத்திலேயே தீர்ப்புக்கு முழக்கமிட்டவர்களை கைதுசெய்ய வேண்டும்” என்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அனுப்பி, வாயிலை அடைத்தனர்.

இந்த சம்பவம் மதிய நேரத்தில் நடந்தது.

இரு தரப்பினரும் வெளியேற்றப்பட்ட பிறகு நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்  செய்தியாளர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

பிறகு, மாலை  குற்றவாளிகளுக்கான தீர்ப்பு நகல்கள் அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.