சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள்

சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள்

சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள் பற்றிய சில தகவல்கள் :-

வேலூர்- தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் திருக்கோயிலில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவுக்கு எதிரில் கலைமகள் காட்சி தருகிறாள்.

கும்பகோணம் அருகில் உள்ள திருவீழிமலை திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய மூன்று தேவியரும் தனித்தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தனர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகள் முறையே சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என அழைக்கப்படுகின்றன.

குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக்கோயிலில் அருள் புரியும் சரஸ்வதி தேவியைக் கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு.

கங்கை கொண்ட சோழபுரம் பெரியகோயிலின் வடக்கு வாசல் மாடத்தில், நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் மேற்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் ஞானசரஸ்வதி என்ற பெயரில் அழகிய சிற்பம் உள்ளது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் சரஸ்வதியைத் தரிசிக்கலாம். மேலும் கீழமாட வீதியில் கோமதி அம்மன் கோயிலிலும், தனிச் சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி அருள் புரிகிறாள்.

தஞ்சாவூர் பெரிய கோயில் தென்புற வாயிலின் மேல் திசையில் இரு கரங்கள் கொண்ட சரஸ்வதி சிற்பம் உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். மேலிரண்டு கரங்களில் அக்ஷமாலை- சுவடியும், முன்னிரு கரங்களில் அபய, உரு முத்திரையுடனும் விளங்குகிறாள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண் ஒன்றில் சரஸ்வதியின் திருவுருவம் நின்ற நிலையில், கையில் வீணையுடன் உள்ளது.

வேதாரண்யத்தில் அருள் புரியும் சரஸ்வதிக்கு வீணை கிடையாது. யாழைப் பழித்த மொழியாள் எனும் அம்பிகையை நோக்கி சரஸ்வதி தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

தஞ்சாவூர்- திருவையாறு சாலையில் உள்ள திருக்கண்டியூர் ப்ரம்மஸ்ரகண்டீஸ்வரர் ஆலயக் கருவறையில் நான்கு திருக்கரங்கள் கொண்ட சரஸ்வதி, பிரம்மாவுடன் இணைந்து காட்சி தருகிறாள். அற்புதமான திருக்கோலம் இது!

திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர்கோவிலில் பிரம்மா சந்நிதிக்கு இடப்புறம் சரஸ்வதிக்குத் தனி சந்நிதி உள்ளது. அக்ஷமாலையும், ஓலைச் சுவடியும் ஏந்தி அபய- வ்ரத முத்திரை தாங்கி, தெற்கு திசை நோக்கி சுகாசன கோலத்தில் கலைமகள் அருள் புரிகிறாள். கையில் வீணை இல்லாத இவளை, ஞானசரஸ்வதி என்று போற்றுகிறார்கள்.

கங்கை கொண்ட சோழபுரம், திருக்கோடிக்காவல் ஆகிய ஸ்தலங்களிலும், சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் அருள் புரிகிறாள்.

காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதிக்குத் தனி சந்நிதி உண்டு. இவளை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் படைத்தலைவிகளில் ஒருத்தியான சியாமளா தேவி ஸ்வரூபமாக வணங்குகிறார்கள். சரஸ்வதி இங்கு எட்டுக் கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், மலரம்பு, கரும்பு, வில் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள்.

கும்பகோணம்- காரைக்கால் சாலையில் உள்ள கூத்தனூர் திருத்தலத்தில் சரஸ்வதிக்குத் தனிக் கோயில் உள்ளது. இங்கு தவக்கோலத்தில் வெள்ளைத் தாமரையில் பத்மாசன கோலத்தில் அமர்ந்து ஞான ஸ்வரூபியாகக் காட்சி தருகிறாள் சரஸ்வதி.