கொல்கத்தா:

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை பிடிக்க சிபிஐ தனிப்படை அமைத்து தேடி வருகிறது.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில்,  சில ஆவணங்கள் மாயமானது தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை மம்தா பானர்ஜி அரசு கைது செய்தது.  இந்த சம்பவம் காரணமாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதையடுத்து, உச்சநீதி மன்றத்தில் சிபிஐ வைத்த கோரிக்கையை தொடர்ந்து, சிபிஐ விசார ணைக்கு  ஆஜராக ராஜீவ்குமாருக்கு  உத்தரவிட்டது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம்  சிபிஐ விசாரண நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்யக்கூடாது என்றும்  உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாத நிலையில், ராஜீவ் குமார் தரப்பில் கோர்ட்டில் இன்று காலை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்ற எல்லை இதுவல்ல என குறிப்பிட்ட நீதிபதி தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில், சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.