குற்றாலத்தில் ‘சாரல் விழா’ இன்று தொடக்கம்: 4 அமைச்சர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி:

குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் 4 பேர் பங்குகொள்கின்றனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆண்டு தோறும் சீசன் காலத்தில் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் குற்றாலத் தில் சாரல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு  குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியில் சீசன் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு தொடர்வதால், அருவி களில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.

இந்த நிலையில், குற்றாலத்தில் பாரம்பரியம் மிக்க  சாரல் திருவிழா இன்று  முதல் ஆகஸ்டு 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று குற்றாலத்தில் உள்ள  கலைவாணர் கலையரங்கில் சாரல் விழா தொடக்க விழா நடை பெறுகிறது. விழாவிற்கு தமிழக  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை தாங்குகிறார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கேற்றி சாரல் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். ற்றுலாத்துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சியில்,  எம்.பி.,கள் பிரபாகரன், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ., செல்வமோகன் தாஸ் பாண்டியன்,  விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், எம்.எல்.ஏ.,கள் முருகையா பாண்டியன், இன்பத்துரை, லெட்சுமணன், மைதீன்கான், முகமது அபுபக்கர், பூங்கோதை ஆலடி அருணா, வசந்தகுமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.  நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வரவேற்றுப் பேசுகிறார்.   சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் அபூர்வவர்மா சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, ரோஸ்மேரி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், இன்னிசை, கிராமிய கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தொடர்ந்து  வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாமில் படகு போட்டி நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு கலைவாணர் கலையரங்கில் யோகா போட்டி நடைபெற உள்ளது.

வரும் 31ந்தேதி காலை 10 மணிக்கு பராசக்தி மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி நடக்கிறது.

ஆக.1ந்தேதி காலை 10 மணிக்கு குற்றாலம் பேரூராட்சி நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி நடைபெற உள்ளது.

அன்று மாலையில் பராசக்தி மகளிர் கல்லூரியில் வில்வித்தை போட்டியும் நடக்க உள்ளது.

ஆகஸ்டு 2ந் தேதி பராசக்தி மகளிர் கல்லூரியில் கோலப்போட்டி நடைபெறுகிறது. அன்றே  கலைவாணர் கலையரங்கில் கொழு கொழு குழந்தைகள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்டு 3ந்தேதி கலைவாணர் அரங்கி  ஆணழகன் போட்டி நடைபெற உள்ளது.

ஆகஸ்டு 4ந்தேதி நிறைவு நாள் அனறு  மினி மாரத்தான் போட்டியும் நடைபெறுகிறது. அதை யொட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.